பொள்ளாச்சியில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்! ரெயில்வே அதிகாரிகள் தகவல்!!

    -MMH 

அகலரெயில் பாதை பணிகளுக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு முதல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ரெயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ரெயில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பை காரணம் காட்டி திருச்செந்தூர் ரெயில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் திருச்செந்தூருக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் தெரிவித்தது. இதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ளது.

அதன்படி வருகிற 15-ந்தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கும், 16-ந்தேதி முதல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் ரெயில், பழனிக்கு 8.15 மணிக்கும், திண்டுக்கலுக்கு 9.20 மணிக்கும், மதுரைக்கு 10.25 மணிக்கும், பகல் 1.45 மணிக்கு நெல்லைக்கும், மாலை 3.45 மணிக்கு திருச்செந்தூருக்கும் செல்கிறது.

மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில், நெல்லைக்கு 1.30 மணிக்கும், மாலை 4.25 மணிக்கு மதுரைக்கும், திண்டுக்கல்லுக்கு மாலை 6 மணிக்கும், பொள்ளாச்சிக்கு இரவு 7.55 மணிக்கும் வந்து சேருகிறது. இந்த ரெயிலில் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். மேலும் பொள்ளாச்சி-திருச்செந்தூர் வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும், அதே ரெயில் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டிற்கு சிறப்பு பயணிகள் ரெயிலாக இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன் . 

Comments