கோவையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பு!! மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!!

 -MMH 

கோவையில் பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக அந்த நிலங்களை மீட்க நகரமைப்பு துறை அலுவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கருப்ப கவுண்டர் வீதியில்(82-வார்டு) மாநகராட்சி பள்ளி அருகே 1.25 சென்ட் நிலம், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு ஷெட் அமைத்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. 

இதனால் அந்த நிலத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. உடனே அவர் பொருட்களை மட்டும் எடுத்து சென்றார். ஆனால் ஷெட் அகற்றப்படவில்லை. 

இதையடுத்து அங்கு நேற்று காலையில் நகரமைப்பு திட்ட அதிகாரி பாபு தலைமையிலான அதிகாரிகள் சென்று, பொக்லைன் எந்திரம் மூலம் ஷெட்டை அகற்றி, அந்த நிலத்தை மீட்டனர். பின்னர் ‘இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்’ என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கருப்ப கவுண்டர் வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றும் பணி நடந்தது. 

அப்போதுதான் மாநகராட்சிக்கு சொந்தமான 1.25 சென்ட் நிலம் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது. தற்போது மீட்கப்பட்ட அந்த நிலத்தை, மாநகராட்சி பள்ளி பயன்பாட்டுக்கு உபயோகிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments