மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு !

   -MMH 

   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்ததும் கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதுமான வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான 14.39 ஏக்கர் புறம்போக்கு நிலம்  தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ளது.கோவிலின் முன்னாள் பூசாரி தங்கவேல் என்பவர் அந்த நிலத்திற்கு அவரே உரிமைதாரர் என அறிவிக்கக் கோரி கோவை மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் ஆக்கிரமிப்பு நிலத்தில் தென்னை மற்றும் வாழை விவசாயம் செய்து வந்ததோடு தகரக் கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டு வந்ததாக தெரிகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு வழக்கில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டது. இந்த நிலையில் தங்கவேல், அவரது மகன் குமரேசன் ஆகியோர் காலமாகி விட்டனர்.  இதனை தொடர்ந்து குமரேசன் பூசாரியின் மகன்களான மோகன்ராஜ், காளிமுத்து ஆகியோரின் காப்பாளர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சண்முகம் என்பவர் 2-வது மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்று இருந்தார்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வின்போது  கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கிரமிப்பாளர்களை நிலத்தை விட்டு வெளியேற வழக்கை துரிதப்படுத்தும் படி அறிவுறுத்தினார். வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்  மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. 

இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. கோவை வடக்கு  ஆர்.டி.ஓ.ரவிச்சந்திரன் மேற்பார்வையில், தாசில்தார் ஷர்மிளா, உதவி ஆணையர் ஹர்ஷினி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட தகர கொட்டகைகள் பொக்லைன் எந்திரம் மூலம்  அகற்றப்பட்டன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காரமடை  போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.மீட்கப்பட்ட நிலத்தைச் சுற்றிலும் முள்வேலி கம்பி போடப்பட்டது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments