அன்னூர் குளத்தில் தண்ணீர் வந்தும் பயனில்லை! விவசாயிகள் கவலை! ! குப்பைகளால் நிரம்பி வழியும் அவலம்!!!

   -MMH 

   அன்னுார் குளத்தில், தண்ணீர் வந்தும் பயனில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.அன்னுார் - மேட்டுப்பாளையம் ரோட்டில், 119 ஏக்கர் பரப்பளவில், பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் ஒரு கரை மேட்டுப்பாளையம் சாலையிலும், மற்றொரு கரை ஓதிமலை சாலையிலும் உள்ளது. குளத்தில் நீர் நிரம்பினால், சுற்றுவட்டாரத்தில் பல நுாறு ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.இந்த குளத்துக்கு ஒட்டர்பாளையம், வடக்கலூர் ஊராட்சிகள் மற்றும் அன்னுார் நகரில் இருந்தும் மழை நீர் வருகிறது. சில ஆண்டுகளாக, அன்னுார் குளத்தில் பேரூராட்சி, தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து டன் கணக்கில் குப்பைகள், தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுகின்றன. சாக்கடை கழிவுநீரும் குளத்தில் வந்து சேருகிறது.குளத்தில் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் திரிகின்றன. சந்தையில் மீதமாகும் காய்கறி கழிவுகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் குளத்துக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் குப்பை கிடங்காக குளம் மாறி விட்டது. கடந்த இரு வாரங்களாக அன்னுார் பகுதியில் விட்டுவிட்டு பெய்த மழையால் அன்னுார் குளத்தில், 50 ஏக்கர் பரப்பளவுக்கு மழைநீர் நிரம்பியுள்ளது. குளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஏக்கரில் மழைநீர் நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் குளத்திற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்னுார் குளத்தில் இவ்வளவு நீர் தற்போது தான் வந்துள்ளது. ஆனால், நீரில் முழுவதும் சாக்கடைக் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக்குகள் மிதக்கின்றன. இந்த நீர் சிறிது கூட பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் உள்ளது. இனியாவது, குளத்திற்குள் குப்பை கொட்டாமலும், கழிவுநீர் சேராமலும் இருக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓரிரு மாதங்களில் அத்திக்கடவு திட்டத்தில் இந்த குளத்தில் மழைநீர் நிரப்பினாலும் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலைதான் ஏற்படும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

-S.ராஜேந்திரன்

முகமது சாதிக் அலி.

Comments