சிங்கம்புணரியில் சேறும் சகதியுமான சாலையை சரி செய்வதில் அதிகாரிகள் அலட்சியம்! மாவட்ட ஆட்சியரை அணுக பொதுமக்கள் முடிவு!!

 -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மேற்கு முத்துவடுகசுவாமி நகரில் சுமார் 100 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி, சிங்கம்புணரி பேரூராட்சி எல்லைக்குள் இருந்தாலும், உள்ளாட்சி நிர்வாக ரீதியாக அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஆகும்.

இந்தப் பகுதியின் முக்கிய சாலை, சேறும் சகதியுமாக மிக மோசமான பயன்படுத்த இயலாத நிலையில் இருந்து வருகிறது.இந்தச் சாலையை பள்ளி மாணவ - மாணவிகளும், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தினமும் கடந்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

தினந்தோறும் இந்தச் சாலையில் சீருடையுடன் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளில் சிலர் தடுமாறி சகதியில் விழுந்து எழுந்து செல்லும் அவலம் அவ்வப்போது நேருகிறது. குடியிருப்புவாசிகளின் அவசரத் தேவைக்கு மருத்துவர்கள் வந்து செல்லும் போதும், ஆட்டோ போன்ற வாகனங்கள் கடக்க முயலும் போதும் சேற்றில் சிக்கிக் கொள்ளும் சங்கடங்களும் தொடர்ச்சியாக நிகழ்கின்றன.

இந்த அவலத்தை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றும் தங்களது சாலை பராமரிப்பு செய்யப்படவில்லை என இந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

எனவே, தங்கள் பகுதி சாலையின் அவலநிலை பற்றிய தகவலை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என இந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்தப்பகுதியில் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் சரிவர சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments