சிங்கம்புணரி அருகே உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராம சேவை திட்டம் துவக்க விழா! செயிண்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் மார்கரெட் பாஸ்டின் ஏற்பாடு!

   -MMH 

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராம சேவைத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 221 கிராமங்களை தத்தெடுத்து செயல் படுத்தப் பட்டிருக்கிறது.

222ஆவது கிராமமாக, சிங்கம்புணரி செயின்ட் ஜோசப் மகளிர் கலைக் கல்லுரி முதல்வர், முனைவர், அருட்சகோதரி மார்கரெட் பாஸ்டின் ஏற்பாட்டின்படி, சிங்கம்புணரி அருகிலிருக்கும் கண்ணமங்கலப்பட்டி என்ற கிராமத்தை தத்தெடுத்து துவக்கவிழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் செம்மலர் சந்திரன் தலைமை ஏற்றார். சங்கத்தின் மதுரை மண்டலச் செயலாளர் கதிரேசன் வரவேற்புரையாற்றினார்.

உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் திட்டத்தை துவக்கி வைத்தார். முனைவர் அருட்சகோதரி மார்கரெட் பாஸ்டின் வாழ்த்துரை வழங்கினார்.

கிராமிய சேவை திட்டத்தை துவக்கி வைத்து மயிலானந்தன் திட்டத்தின் சிறப்புகளை பற்றி பேசும் போது, 'கண்ணமங்கலப்பட்டி, தலைவணங்கான்பட்டி இரு  கிராம மக்களுக்கும் யோகாசனம், தியானம், மனவளக்கலை மற்றும் குடும்பநல ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. மேலும்  இந்த திட்டக்குழுவின் சார்பில் இரண்டு நபர்கள் 5 மாதங்கள் இந்த கிராமத்திலேயே தங்கியிருந்து, மக்களோடு பழகி பயிற்சி வழங்க இருக்கிறார்கள்' எனத் தெரிவித்தார்.

மேலும், '5 மாதங்கள் செயல்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டத்தில் கிராம மக்களுக்கு மனநல ஆலோசனை முகாம், மருத்துவ முகாம், ஆரோக்கியம் மேம்பட்டு முகாம், சுற்றுப்புற சுகாதார முகாம் போன்றவை நடத்தப்படும்' எனவும் தெரிவித்தார்.

நிகழ்வில், திருச்சி அருமை கலைக்காரியாலயம் குழுவினர் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். பேராசிரியர் முனைவர் திருமா.பூங்குன்றன், ஆசிரியர் சேவுகமூர்த்தி, பாலமுருகன், செல்வராஜ், சுப்பிரமணியன் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிராம பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில்,  மருத்துவர்கள் ஜானகிராமன் மற்றும் வசுமதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நிறைவாக, திருப்பத்தூர் மனவளக்கலை மற்றும் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.சுகுமாரன் நன்றி உரையாற்றினார்.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments