நத்தைகளின் படையெடுப்பால் பொதுமக்கள் பீதி! கட்டுப்படுத்த வேண்டி பொதுமக்கள் கோரிக்கை! !

    -MMH 

   காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட குந்தா காலனி, திரு.வி.க. நகர், தோலம்பாளையம் சாலை, ரெயில்வே கேட் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நத்தைகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் நத்தை களின் படையெடுப்பு மேலும் அதிகரித்து உள்ளது. தற்போது அந்தப் பகுதியை சேர்ந்த வீடுகள், கடைகள் பகுதிகளில் நத்தைகள் தொல்லை அதிகரித்து உள்ளது. 

இந்த நத்தைகள் சிறிய அளவில் இல்லாமல் பெரிய அளவில் இருப்பதாலும், வீடுகளுக்குள்ளும் நத்தைகள் புகுந்து விடுவதால் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நத்தையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 

"கடந்த சில நாட்களாக நத்தைகள் விவசாய நிலங்கள், சாலை யோரத்தில் உள்ள மரங்களில் இருந்த நிலையில் தற்போது வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. வீட்டில் உள்ள பாத்திரங்கள், பொருட்களில் அவை ஆக்கிரமித்து உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.  

தற்போது அதன் வருகை அதிகரித்து விட்டது. அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கு பார்த்தாலும் அவற்றின் ஆக்கிரமிப்புதான் அதிகமாக இருக்கிறது. எனவே அவற்றின் தொல்லையை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும்." இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறும்போது, குந்தா காலனியில் மின்வாரிய அலுவலகம் உள்ளதால் மேற்கு வங்காளம், ஒடிசா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உதிரி பொருட்கள் கொண்டு வருவதால் அங்கிருந்து நத்தைகள் இடம் பெயர்ந்து வந்து விட்டது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments