காளையார்கோவில் காவலரிடம் முகநூல் நட்பில் முகத்தையே காட்டாமல் பல லட்சங்கள் சுருட்டிய பெண்!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான பாரதிராஜா. இவர் மணிமுத்தாறில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை திருவொற்றியூரில் உள்ள கடலோர காவல்படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி, பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஐஸ்வர்யா என்பவர் பெண் நண்பராக அறிமுகமானார். நாளடைவில் இவர்களது முகநூல் நட்பு, காதலாக மலர்ந்துள்ளது.
தான் மருத்துவம் படிப்பதாக கூறிய அந்தப் பெண், அடிக்கடி செல்போன் மூலமாக பேசியும், முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக சாட் செய்தும் வந்துள்ளார். அந்த பெண் காவலர் பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய மருத்துவ படிப்பிற்கு தேவைப்படுவதாகக் கூறி, பாரதிராஜாவிடம் பணம் கேட்டுள்ளார். தனது தந்தை பழனியின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கூறி படிப்படியாக பாரதிராஜாவிடமிருந்து 14 லட்சம் ரூபாயை பெற்றிருக்கிறார்.
இதற்கிடையில், ஐஸ்வர்யா, அவருடைய தங்கையை பாரதிராஜாவிடம் முகநூலில் அறிமுகப்படுத்தியுள்ளார். பாரதிராஜாவோ, தன்னுடைய தம்பி அதாவது பெரியப்பா மகன் மகேந்திரனை, ஐஸ்வர்யாவின் தங்கைக்கு முகநூலில் அறிமுகம் செய்து வைத்துள்ளர். ஐஸ்வர்யாவின் தங்கையும், மகேந்திரனும் முகநூலில் நட்பானார்கள்.
ஒருகட்டத்தில் மகேந்திரனை திருமணம் செய்து கொள்ள, ஐஸ்வர்யாவின் தங்கை ஆசைப்பட்டுள்ளார். மகேந்திரனும் அதற்கு சம்மதம் சொல்லவே, ஐஸ்வர்யா பாரதிராஜாவிடம் கேட்டது போலவே பணம் கேட்டுள்ளார் அவர் தங்கை. எனவே, மகேந்திரனும் கடந்த 6 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக 20 லட்சம் வரை வங்கி கணக்கில் ஐஸ்வர்யா தங்கைக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்.
இதைத்தவிர, ஒரு சவரன் தங்கச் சங்கிலி, ஒரு ஜோடி கொலுசு வாங்கி கொரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதன்பின்னர், கடந்த ஒரு மாதமாகவே ஐஸ்வர்யாவிடம் இருந்து எந்த்த் தகவலும் பாரதிராஜாவுக்கு வரவில்லை.. அதேபோல ஐஸ்வர்யாவின் தங்கையிடம் இருந்தும் மகேந்திரனுக்கு எந்தத் தகவலும் வரவில்லை.
இதற்கு பிறகுதான் அந்த அதிர்ச்சி விஷயம் வெளியேவந்தது. பாரதிராஜா ஐஸ்வர்யாவையும், மகேந்திரன் ஐஸ்வர்யாவின் தங்கையையும் இதுவரை ஒருமுறைகூட நேரில் பார்த்ததில்லையாம்.
இவ்வளவு நாளும் போனில்தான் பேசிக் கொண்டு வந்தார்களாம். ஒருவர் 14 லட்சமும் இன்னொருவர் 20 லட்சம் தந்து ஏமாந்துள்ளனர். அண்ணன் - தம்பி சேர்ந்து இப்படி ஒரே நேரத்தில் ஏமாந்து போய்விட்டோமே என்று அதிர்ந்து போனார்கள். இதற்கு பிறகுதான், பாரதிராஜா சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
காவல் ஆணையாளர் சங்கர் ஜீவால், புகாரை ஆவடி காவல்நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஐஸ்வர்யாவின் செல்போன் எண்களைக் கொண்டு அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ஐஸ்வர்யாவையும், அவரது பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உச்சகட்ட அதிர்ச்சி அனைவருக்கும் காத்திருந்தது. அதாவது, பாரதிராஜாவிடமும், மகேந்திரனிடம் ஒரே நேரத்தில் ஃபேஸ்புக்கில் சேட்டிங் செய்து வந்ததுடன், இருவரிடமும் போனில் குரலை மாற்றி மாற்றிப் பேசி வந்ததும் ஐஸ்வர்யாவேதான்.
மேலும், பாரதிராஜா மற்றும் மகேந்திரனுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன.. ஐஸ்வர்யா டாக்டருக்கு படிக்கவேயில்லையாம். +2வரைதான் படித்துள்ளாராம்.
தனது அக்கா வைத்திருக்கும் ஃபேன்ஸி ஸ்டோரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதைவிட இன்னொரு ஹைலைட் உள்ளது, ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.
கணவர் பெயர் சரண்குமார். ஆந்திர மாநிலம் நகரியில் வேளாண்மை துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இன்னொரு கொசுறு தகவலும் உண்டு! ஐஸ்வர்யா இப்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறாராம்.
இவ்வளவும் செய்த அந்த ஐஸ்வர்யாவை, காவல்துறை விசாரணையின்போதுதான், பாரதிராஜாவும், மகேந்திரனும் நேரில் பார்த்தனர்.
அதுவரை முகநூலில் வைத்திருந்த புரொபைல் போட்டோவும் ஐஸ்வர்யாவின் போட்டோ இல்லை என்பதைத் தெரிந்து நொந்துபோயிருக்கிறார்கள். யாரோ ஒரு அழகான இளம்பெண்ணின் போட்டோவை வைத்து, ஐஸ்வர்யா ஏமாற்றி வந்துள்ளார்.
ஐஸ்வர்யா மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஐஸ்வர்யாவின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில், இளம் காவலர்களை மட்டுமே நண்பர்களாக்கி அவர்களிடம், தான் காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பாரதிராஜா மற்றும் மகேந்திரனிடம் மோசடி செய்த 34 லட்ச ரூபாய் பணத்தில் அந்த பெண் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவருடைய முகநூல் கணக்கில் சுமார் 200 காவல் துறையினர் நண்பர்களாக உள்ள நிலையில், யார் யாரிடம் ஐஸ்வர்யா மோசடி செய்துள்ளார் என்பதை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- பாரூக், சிவகங்கை.
Comments