சாலையோரத்தில் குட்டிகளுடன் யானைகள் கூட்டம்! சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் வேண்டுகோள்!!

     -MMH 

ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை பறவை இனங்களும் உள்ளன. இந்த நிலையில் சுற்றுலா தலமான டாப்சிலிப்பின் அழகை ரசிப்பதற்கும், வனவிலங்குகளை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்கள் வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாப்சிலிப்-சேத்துமடை ரோட்டில் குட்டிகளுடன் யானைகள் கூட்டம், கூட்டமாக நிற்கின்றன. இதையடுத்து புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொடர் மழை காரணமாக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் டாப்சிலிப்-சேத்துமடை ரோட்டோரத்தில் நிற்கின்றன. எனவே டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யானைகளை பார்த்தால் வாகனங்களை நிறுத்தி செல்போனில் செல்பி புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் சத்தமாக பாடல்களை ஒலிபரப்ப கூடாது. யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும் என்பதால் வாகனங்களை வேகமாக செல்ல கூடாது.

வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி யானைகள் நடமாட்டம் உள்ள தண்ணீர் பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிக்கப்படுகிறது. மேலும் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக.

-S.ராஜேந்திரன். திவ்ய குமார், வால்பாறை.

Comments