எஸ்.எஸ்.கோட்டை அருகே வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!! காவல்துறை தீவிர விசாரணை!!

  -MMH 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடப்பட்டி கிராமத்தில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இருசக்கர வாகனங்களில் 5 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர்.

இதில் சில வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்களால் சரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் ஓடப்பட்டி கிராமத்தில் முகாமிட்டு, பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெட்ரோல் குண்டுகளை வீசியவர்கள் யார்?, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு ஓடப்பட்டி கிராமத்தினருக்கும், அருகிலுள்ள மற்றொரு கிராமத்தினருக்கும் சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஓடப்பட்டி கிராம மக்களை மிரட்டுவதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சினால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- அப்துல்சலாம், பாரூக்.

Comments