கோவை விடுதி அறையில் கொள்ளையடித்த கும்பல்! தங்கியிருந்த பெண்கள் இருவரையும் அரிவாளால் மிரட்டி, கடத்திச்சென்ற சம்பவம்! காவல்துறையினர் தீவிர விசாரனை!!!
சரவணம்பட்டி, விநாயகபுரம் அருகே உள்ள ஸ்ரீவெற்றி விநாயகர் நகரில், 'அதிதி சர்வீஸ் அபார்ட்மென்ட்' என்ற பெயரில் விடுதி செயல்படுகிறது. இதன் மேலாளராக பணியாற்றி வருபவர் ஹரிஹரன், 34. இவர் பணியில் இருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் வந்தது.
'சிவக்குமார் என்பவர் தங்கியுள்ளாரா, அவரது அறை எது' என, கேட்டனர். சந்தேகமடைந்த ஹரிஹரன், சிவக்குமாருக்கு போன் செய்து, 'உங்களை பார்க்க சிலர் வந்துள்ளனர்' என தெரிவித்தார். அதற்கு அவர், 'நான் யாரையும் வரச்சொல்லவில்லை' என பதில் கூறினார்.
இந்நிலையில், தேடி வந்த கும்பலில் ஒருவர், விடுதி மேலாளர் ஹரிஹரனை அரிவாளால் தாக்கி, அறையை காட்டுமாறு மிரட்டினார். பயந்துபோன ஹரிஹரன், சிவக்குமார் அறைக்கு எதிர் அறையை காட்டினார். அங்கு சென்ற கும்பல், அந்த அறையில் இருந்த பணம் 21 ஆயிரம் ரூபாய், லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
கிளம்பியபோது, விடுதியில் தங்கியிருந்த பெண்கள் இருவரை பார்த்த கொள்ளையர்கள், அரிவாளை காட்டி மிரட்டி, அவர்களையும் இழுத்துச் சென்று விட்டனர். சம்பவம் பற்றி சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, கொள்ளை கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள், தாங்கள் பத்திரமாக வீடு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை தேடி வரும் போலீசார், விடுதி ஊழியர்கள், அங்கு தங்கியிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.
Comments