திருச்செந்துார் - பொள்ளாச்சி ரயில் இயக்கம் தள்ளி வைப்பு! கோவை அல்லது மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க கோரிக்கை!!

   -MMH 

   கோவையிலிருந்து பொள்ளாச்சி வழித்தடத்தில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பல்வேறு ரயில்களும் அகல ரயில் பாதை, மின்சாரமயமாக்கல் ஆகிய காரணங்களால், பத்தாண்டுக்கும் மேலாக நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில், மீண்டும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் பேர் வசிக்கின்றனர். கூடுதல் ரயில்களை இயக்கும்பட்சத்தில், ரயில்வே துறைக்கும் பெருமளவில் வருவாய் கிடைக்கும்.பாலக்காட்டிலிருந்து திருச்செந்துாருக்குச் சென்று கொண்டிருந்த ரயிலை மீண்டும் இயக்குவதற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக இந்த ரயில், பொள்ளாச்சியிலிருந்து திருச்செந்துாருக்கு சிறப்பு பயணியர் ரயிலாக இயக்கப்படும்; பின்னர் பாலக்காடுக்கு நீட்டிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாவட்டச் செயலாளர் கணேசன் கூறுகையில், ''பாலக்காட்டிலிருந்து திருச்செந்துாருக்கு ரயில்களை இயக்குவதற்குப் பதிலாக கோவை அல்லது மேட்டுப்பாளையத்திலிருந்து இந்த ரயிலை இயக்கினால், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்,'' என்றார்.

திருச்செந்துார் ரயிலை பாலக்காடுக்கு நீட்டிக்கும்பட்சத்தில், போராட்டம் நடத்தவும் சில அமைப்புகள் தயாராகவுள்ளன. இதை அறிந்த தெற்கு ரயில்வே, திருச்செந்துார் ரயில் இயக்கத்தை தள்ளி வைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.பாலக்காடு கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் ரயில் என்பதால், இதை கோவைக்கு நீட்டிப்பது பற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகள்தான் முடிவு செய்ய முடியும்.

தற்போது இந்த ரயிலை இயக்கும் நாள் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போடப்பட்டிருப்பதால், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை ஏற்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments