கோயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் இலவசம்: புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!
கோயில்கள், அவற்றுக்குச் சொந்தமான மண்டபங்களில் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் இல்லாமல் திருமணம் செய்யும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், மணமக்களில் ஒருவா் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அவா்களிடம் திருமணத்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், கோயிலுக்குச் சொந்தமான மண்டபத்தில் திருமணம் நடந்தால் பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை தொடக்கி வைத்தாா். சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளி திருமணத்துக்கு கட்டணம் இல்லை என்பதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். மேலும், திருமண வாழ்த்துகளுடன் பரிசுப் பொருள்களையும் அளித்தாா்.
ஆறு மாற்றுத் திறனாளிகள் விருது: சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒட்டி, தேசிய அளவிலான விருதினை தமிழகத்தைச் சோந்த ஏ.எம்.வேங்கடகிருஷ்ணன், எஸ்.ஏழுமலை, கே.தினேஷ், மானகஷா தண்டபாணி, கே.ஜோதி, டி.பிரபாகரன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரால் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை முதல்வரிடம் புதன்கிழமை காண்பித்து அவா்கள் வாழ்த்துப் பெற்றனா்.
-பாலாஜி தங்கமாரியப்பன் போரூர் சென்னை.
Comments