கொரோனா தொற்று விழிப்புணர்வு இல்லாமல் மக்கள்அலட்சியம்!!

     -MMH 

   கோவையில் பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் அலட்சிய மாக உள்ளனர். 5 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வில்லை.

தமிழக அளவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து 2-ம் இடத்தில் நீடித்து வருகிறது. ஆனாலும் கோவை மாநகரில் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். 

குறிப்பாக காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

"கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கா விட்டால் 3-வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ஆனால் கோவையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பது கவலை அளிக்கிறது. எனவே முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை தவிர வேறுவழியில்லை.   

கோவை மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் காலஅவகாசம் முடிந்தும் 5 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக சுகாதார நிலையங் களை அணுகி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதன்மூலம் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை பெற முடியும்.

ஒமைக்ரான் அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தினமும் 800 முதல் 1,500  மாணவ- மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.

கோவையில் தற்போது கொரோனா பரவல் 1.5 சதவீதமாக உள்ளது. இது கடந்த மாதம் 55 சதவீதம் என்ற அளவில் இருந்தது. கடந்த காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது."

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments