கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது ! குடும்பத்துடன் பங்கேற்று மக்கள் மகிழ்ச்சி!

-MMH

    பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு லூர்து மாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று அதிகாலை 2 மணி வரை சிறப்பு ஆராதனை மற்றும் கூட்டுதிருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். 

மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு கேக் வழங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். இதேபோன்று பொள்ளாச்சி இந்திரா நகர் சி.எஸ்.ஐ. தேவாலயம், டி.இ.எல்.சி. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

வால்பாறையில் நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள அனைத்து சபைகளின் தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. வால்பாறையில் உள்ள தூய இருதய தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் 12 மணி வரை கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டது. இதனையடுத்து பங்கு குருக்கள் மரியஜோசப், ரஞ்சித்குமார் ஆகியோர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை பவனியாக எடுத்து வந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மாட்டுக்குடிலில் வைத்து ஆராதித்து அனைவரது ஆராதனைக்காக திறந்து வைத்தனர். தொடர்ந்து பங்கு மக்கள் மாட்டுக்குடிலில் உள்ள குழந்தை இயேசு சொரூபத்துக்கு ஆராதனை செலுத்தினார்கள்.

பின்னர் ஆலயத்தில் பங்கு குருக்கள் தலைமையில் இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்து கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்கு மக்கள் மட்டுமல்லாமல் வால்பாறைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் இந்த கிறிஸ்துமஸ் திருப்பலியில் கடுங்குளிரில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். வால்பாறை சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் தலைமை ஆயர் ஜெயராஜ் தலைமையிலும், எஸ்டேட் பகுதியில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ. தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் தேவாயத்தில் பங்கு குரு ஆனந்த் தலைமையிலும், முடீஸ் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்கு குரு மரிய அந்தோணி தலைமையிலும், சோலையாறு நகர் புனித சூசையப்பர் தேவாலயத்தில் உதவி பங்கு குரு பினிட்டோ தலைமையிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு மாட்டுக்குடிலில் இயேசு கிறிஸ்துவின் சொரூபம் வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதன்பிறகு ஒருவருக்கொருவர் கேக் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சி.ராஜேந்திரன். செந்தில்குமார் (மூடீஸ்).

Comments