சிங்கம்புணரி அருகே லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது! பொறிவைத்துப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ் புதூர் ஒன்றியவட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணிபுரிந்து வந்தவர் நிர்மல்குமார் (48). இவர் அதிக அளவில் லஞ்சம் வாங்கிக் கொண்டிருப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தொடர்ந்து தகவல் வந்த வண்ணம் இருந்தது. அவர்களும் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், எஸ்.புதூர் மற்றும் உலகம்பட்டி உள்ள பள்ளிக்கூடங்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை ஒதுக்கித் தருவதற்காக, படமஞ்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரிடம் நிர்மல்குமார் முன்பணமாக முப்பதாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் தருவதற்கு சம்மதமில்லாத வெள்ளைச்சாமி,
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெள்ளைச்சாமியிடம் கொடுத்தனுப்பினர்.
நேற்று மதியம் ஒரு மணியளவில் லஞ்சப் பணத்தை நிர்மல்குமாரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் நிர்மல்குமாரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மணிமன்னன், ஆய்வாளர் குமாரவேல், சார்பு ஆய்வாளர் ராஜாமுகமது மற்றும் காவல்துறையினர் நிர்மல்குமாரிடம் 5 மணிநேரம் நடத்திய விசாரணைக்குப் பின்பு அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
- ராயல் ஹமீது, அப்துல்சலாம்.
Comments