கண்கண்ட தெய்வம் விநாயகர் பெருமைகள்..!!

   -MMH 

   நமது சம்பிரதாயத்தில் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும், பூஜைகளிலும் முதலில் துதிக்கப்படுபவர் விநாயகர் கலௌ சண்டி விநாயகௌ என்ற வாக்கியத்தின் மூலம் கலியுகத்தின் மூலம், கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் விநாயகரே என்று அறிகிறோம். விக்னங்களை உடைத்தெறியும் வல்லமை பெற்றவர். ஆதலால், விக்னேஸ்வரன் என்று போற்றுகிறோம்.

 தன்னலமற்ற பக்தியின் மூலம் விநாயகரின் அனுக்ரகத்தை எளிதாகப் பெறலாம். என்பது சான்றோர்கள் வாக்கு. விநாயகரை அனுதினமும் ஆராதிக்கலாம். எனினும் மாதந்தோறும் வரும் சங்கடஹரசதுர்த்தி அவருக்கு உகந்த நாள். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி மிக விசேஷம். 

அன்று விநாயகரை பூஜித்து அவருக்கு பிடித்தமான நைவேத்தியங்களைப் படைத்து அவரது அருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.
விநாயகரின் பெருமைகள்: பார்வதி தேவி பரமேஸ்வரனை பூஜித்து பெற்ற தவப்புதல்வன் விநாயகர்! இவரின் உருவ அமைப்பு நமக்கு பல தத்துவங்களை உணர்த்துகிறது. விநாயகரின் வேழமுகம் விளையாட்டு பிள்ளைகளுக்கும் விருப்பமானதாகும். அகலமான காதுகள் மற்றவர் கூறும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்டு, நல்லவைகளை ஏற்று அதன்படியே நடக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்தத்தான் விநாயகரின் நீண்ட துதிக்கை, நாம் நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. அதுமட்டுமல்ல; துதிக்கையானது சின்னஞ்சிறு கனியையும் எடுக்கும்; பெரிய மரத்தையும் வேரோடு பிடுங்கிவிடும். இடத்துக்கு ஏற்ப புரிந்து செயல்பட்டால் நம் வாழ்வு சிறக்கும் என்பது இதில் சூட்சுமம்.

விநாயகரின் உடைந்த தந்தம் மனிதன் தனது ஆசாபாசங்களை உடைத்தெறிந்தால் உன்னதமாக வாழ முடியும் என்பதைக் குறிக்கும். இவரின் கையில் உள்ள அங்குசம் மனிதன் ஆசைகளை அடக்கினால் அமைதியாக வாழலாம் என உணர்த்துகிறது. உலகில் நமக்கு ஏற்படும் இன்ப, துன்பங்கள் அனைத்தையும் சந்தித்து, ஏற்று ஜீரணத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் வகையிலே அமைந்ததுதான் விநாயகரின் பெரிய வயிறு! மூஷிக வாகனம் அளவில் சிறிதாயினும் பக்தியினால், நம்பிக்கையுடன் விநாயகரை சுமப்பதை கவனித்தீர்களா? நம்பியவரைக் காக்க, சேவையை ஏற்றுக் கொள்ள கணநாயகன் கணபதி தம் உடம்பை லேசாக்கி மூஷிகத்தின் மேல் உலா வருகிறார்.

 விநாயகரோடு ஒப்பிடும்போது மூஞ்சுறு மிகச் சிறிய துதான் அது தாங்கும் விநாயகரின் ஆற்றல் வரம்பற்றது. அதாவது, அணுமிக நுண்ணியது. அதன் ஆற்றல் அளப்பரியது என்பதை உணர்த்தும் மெ ய்ஞான அறிவியல் இது. இவை அனைத்தையும்விட, அடிப்படையான ஒரு செய்திதான் விநாயகர் உணர்த்துவது; எல்லாரும் அணுகும் வண்ணம் எளிமையாய் இரு; இனிமையாய் இரு, பொறுமையாய் இரு; அப்படியிருந்தால் அனைவராலும் விரும்பப்படுவாய் என உணர்த்துகிறார் விநாயகர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V.ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.

Comments