நெல்லை போல் கோவையிலும் பள்ளி கட்டடங்களின் தரம் ஆய்வு ! விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு! !

   மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே, இடிக்கப்பட வேண்டிய, கட்டடங்களின் பட்டியல் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. விரைவில் பழுதடைந்த கட்டடங்களை, அப்புறப்படுத்த வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பணிகள் வேகமாக நடக்கின்றன.

திருநெல்வேலி நகர் பகுதியில் உள்ள, அரசு உதவிபெறும் பள்ளி, கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததோடு, நான்கு பேர் படுகாயம் அடைந்த சம்பவம், அனைவரையும் பதைபதைக்க செய்துள்ளது.அடித்தளமே இன்றி, சுவர் எழுப்பப்பட்டதால்தான், இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுக்க உள்ள, பள்ளி கட்டடங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, பழுதானவற்றை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவு பேரில், பொதுப்பணித்துறை இப்பணிகளில் தீவிரம் காட்டியுள்ளது.கோவை மாவட்டத்தை பொருத்தவரை, 140 வகுப்பறைகள், 68 கழிவறைகள் இடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக, கடந்த அக்., மாத இறுதியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுப்பணித்துறைக்கு பட்டியல் வழங்கப்பட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாய், பழுதடைந்த கட்டடங்களை இடிக்கும் பணிகள், ஜவ்வு போல இழுத்த நிலையில், திருநெல்வேலி சம்பவத்திற்கு பின், விரைவில் பணிகளை முடிக்குமாறு, கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதனால், பள்ளி விடுமுறை தினங்களில், கட்டடங்களை இடிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.பருவமழைக்கு பின், மேலும் கட்டடங்கள் ஏதேனும் விரிசல் விட்ட நிலையில் பழுதடைந்துள்ளதா என, கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் பட்டியல், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''அரசுப்பள்ளிகளில் அப்புறப்படுத்த வேண்டிய கட்டடங்கள், இடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் ஏதேனும் உள்ளதா என, பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

பழுதடைந்த கட்டடங்களின் அருகில், மாணவர்கள் செல்லாமல் தடுப்பு அமைத்து, கண்காணிக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.கோவை மாவட்டத்தை பொருத்தவரை, 140 வகுப்பறைகள், 68 கழிவறைகள் இடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக, கடந்த அக்.,இறுதியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுப்பணித்துறைக்கு பட்டியல் வழங்கப்பட்டது. திருநெல்வேலி சம்பவத்திற்கு பின், விரைவில் பணிகளை முடிக்குமாறு, கோவை கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதனால், பள்ளி விடுமுறை தினங்களில், கட்டடங்களை இடிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments