கோவையில் 15 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்!!

   -MMH 

    தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. இதை தடுக்க இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. 

கோவையில் தனியார் பள்ளியில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 671 பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 61 ஆயிரம் மாணவ- மாணவிகள் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பள்ளிக்கூடங்களிலேயே முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) மட்டும் 83 பள்ளிகளில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர் குண மடைந்து தனிமையில் உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை.

நேற்று முன்தினம் வெளிநாடுகளில் இருந்து கோவை திரும்பி 19 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது. ஆனாலும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை. கொரோனா அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

டெங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்புக்கு தற் போது 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 166 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினசரி பதிவாகும் கணக்கை கண்காணித்து வருகிறோம். டெங்கு பரவல் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை பொறுத்தவரை மாநில அரசின் முடிவுக ளுக்கு ஏற்றவாறு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட சுகாதார அதிகாரி அருணா, மாவட்ட கல்வி அதிகாரி கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Comments