மேலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து துணிகரக் கொள்ளை! 50 பவுன் நகையுடன் தப்பித்த கும்பல்!

   -MMH 

   மதுரை மாவட்டம், மேலூர் அருகே சத்தியபுரம் கிராமத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்பத்தினரை அரிவாள் மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி, 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சத்தியபுரம் கிராமத்தில் வசிப்பவர் கோபி (வயது28). வெளிநாட்டில் பணிபுரிந்து ஊர் திரும்பிய இவர், கடந்த ஆறு மாதங்களாக தனது கிராமத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தனது வீட்டில் இவர் தாய் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள கிரில்கேட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் புகுந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கோபி, அவரது தாய் இந்திரா மற்றும் கோபியின் மனைவி அணிந்திருந்த தாலிச் சங்கிலி, குழந்தையின் நகைகள் உட்பட, 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு, தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்கள் செல்லும்போது குடும்பத்தினரை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் வந்து பூட்டை உடைத்து கோபியின் குடும்பத்தினரை மீட்டுள்ளனர்.

இது குறித்து கோபி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக மேலூர் காவல்துறையினர் கொள்ளையர்களை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். 

கொள்ளையர்கள் அனைவரும் 30 வயதுக்கு மிகாமல் இருந்ததாகவும், முகமூடி அணிந்து வந்து, பயங்கர ஆயுதங்களை காட்டி, தங்களை மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாகவும் கோபியின் தாயார் இந்திரா தெரிவித்தார். இந்தக் கொள்ளைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- மதுரை வெண்புலி.

Comments