பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு !!

    -MMH 

   கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா வார்டு மற்றும் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள வார்டுகளை பார்வையிட்டார். மேலும் ஆக்சிஜன் பிளாண்டுகளையும் ஆய்வு செய்தார். 

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் சமீரன் கூறியதாவது:-

"கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 4,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 250 படுக்கைகள் உள்ளன. தேவைப்பட்டால் கூடுதலாக 400 படுக்கைகள் ஏற்படுத்தப்படும். போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளது. கொரோனா முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசி 78 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசி 97 சதவீதம் பேர் செலுத்தினால், மேலும் பாதுகாப்பாக இருக்கும்.

ஒமைக்ரான் பாதிப்பு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், மற்றவர்களுக்கும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டால் சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க முடியவில்லை என்று புகார் வந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, அரசு ஆஸ்பத்திரி மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் சரவண பிரகாஷ், நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments