காளாப்பூரில் ஊரணிக்கு குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி! சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!!

   -MMH 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் திருநகர் பகுதியை சேர்ந்தவர் அழகு(வயது 80). இவர் அப்பகுதியிலுள்ள மோலப்பன் ஊரணிக்கு நேற்று மாலை 4 மணியளவில் குளிக்கச் சென்றுள்ளார். அவர் இரவு 7 மணிவரை வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள், ஊரணிக்குச் சென்று பார்த்துள்ளனர்.


ஊரணிக் கரையில் அவரது ஆடைகளும் கைத்தடியும் கிடந்ததுள்ளது. உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஊரணியில் இறங்கித் தேடினர்.

இறுதியில் முதியவர் அழகு, சடலமாக மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக  எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

- அப்துல்சலாம்.

Comments