சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலம் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் பாராட்டை பெற்றுள்ளது!!

   -MMH


கோவையில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலம் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன் அவர்களின் திறமை குறித்த பாராட்டையும் பெற்றுள்ளது.   

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை மற்றும் கே.ஜி அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய கைவினைப்பொருள் செயல்முறை பயிற்சி வகுப்பு ஐந்தாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சரவணம்பட்டியில் உள்ள கேஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் மூலம் புதுமை தொழில்நுட்பத்தை பரப்புதல் என்ற திட்டத்தின் கீழ் மக்கும் தன்மையுடைய கைப்பைகள், கழிவுப்பொருட்கள் மற்றும் வாழைநார், தேங்காய் ஓடு, மூங்கில் போன்றவற்றிலிருந்து கைவினைப் பொருட்களை உருவாக்கும் பயிற்சி வகுப்புகள் தொழில்முறை பயிற்சியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது. 

இதன் மூலம் கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர். இந்நிகழ்வினை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மற்றும் இணை இயக்குநருமான முனைவர் கதிர்வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இக் கண்காட்சியின் மூன்றாம் நாளில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் செயல் உறுப்பினர் முனைவர் ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார். சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் செய்த இக்கைவினைப் பொருட்கள் வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன் அவர்களின் திறமை குறித்த பாராட்டையும் பெற்றுள்ளது. நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் முனைவர் வனிதா முதல்வர்முனைவர் ரத்னமாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments