விபத்தில் தொலைந்த தங்கச்சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த சிங்கம்புணரி காவல்துறை!

   -MMH 

   சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டையைச் சேர்ந்தவர் அமலா (வயது30). இவர் நேற்று மதியம் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சிங்கம்புணரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் தனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், திருப்பத்தூரைச் சேர்ந்த ஹனிபா என்பவர் நத்தம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அமலா குடும்பத்தார் சென்ற வாகனம், கிருங்காக்கோட்டை பிரிவு சாலையில் திரும்பும்போது, அவர்களது வாகனத்தின் மீது பின்னால் வந்து கொண்டிருந்த அனிபாவின் வாகனம் மோதியது.

இதில் காயமடைந்த அமலா, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குதான், அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி தொலைந்தது தெரியவந்தது. உடனடியாக, சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கம்புணரி காவல் சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் பீர்முகமது ஆகிய இருவரும் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையின் விளைவாக, தொலைந்த தங்கச் சங்கிலி அரை மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டது.

சிகிச்சை முடிந்து அமலா குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று, சார்பு ஆய்வாளர் குகன் வசம் இருந்த ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்துச் சென்றனர்.

காவல்துறையின் இந்தத் துரித நடவடிக்கையை, சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments