தென் தமிழகத்தில் தலைதூக்குகிறதா துப்பாக்கி கலாச்சாரம்??? இளைஞர் சுட்டுக்கொலை??...

    சில மாதங்களாகவே சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொடூரக்கொலைகள் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில கொலைகளை தவிர்த்து பல கொலைகள் ரவுடி கும்பல்களின் பழிக்கு பழி, முன்விரோதம் மற்றும் அதிகார போட்டிகளுக்காக நிகழ்த்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

அதன்படி தற்போது திண்டுக்கல் செட்டிகுளம் பகுதியில் மர்ம நபர்கள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 வயது இளைஞர் ராகேஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்கின்றனர் போலீசார்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ். அவர் தமது நண்பர்களுடன் செட்டிகுளம் அருகே குளத்தின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த மர்ம நபர்களில் ஒருவர் அந்த இளைஞர்கள் மீது சரமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ராகேஷ் நெஞ்சில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ராகேஷ் உடலில் மொத்தம் 6 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தன. இதையடுத்து உடனடியாக ராகேஷை அரசு மருத்துவமனைக்கு அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் துறை வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது செட்டிகுளம் குளத்தில் மீன்பிடிக்க ராகேஷ் குத்தகைக்கு எடுத்திருந்தார். இந்த குத்தகை தொடர்பாக மற்றொரு தரப்புடன் ராகேஷுக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தால் ராகேஷ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல்லில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் பாண்டி உள்ளிட்ட ரவுடிகள் ஒருகாலத்தில் தமிழகத்தையே கலக்கினர். இன்றைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் திண்டுக்கல் பாண்டியின் கூட்டாளிகள் தாதாக்களாக வலம் வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு திண்டுக்கல் பாண்டியும் கூட்டாளியும் சென்னை அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு திண்டுக்கல் அருகே பழனியில் நிலத்தகராறில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் பட்டப் பகலில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனியில் தியேட்டர் உரிமையாளர் நடராஜனுக்கும் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே ரூ1 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. இந்த சம்பவத்தில் நடராஜன், துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் சுப்பிரமணி என்பவர் உயிரிழந்தார். தற்போது மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல்லில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திண்டுக்கல்லில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க எஸ்பி.சீனிவாசன் உத்தரவின் பேரில் ஏஎஸ்பிஅருண் கபிலன் தலைமையில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் கொண்ட 5 தனிப்படையினர் அமைத்தனர். மேலும் தனிப்படையினர் மரியநாதபுரம் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

-N.V.கண்ணபிரான்.

Comments