சிறாவயல் மஞ்சுவிரட்டில் வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு போல மாற்றினால், பெரும் போராட்டம் நடத்தப்படும்! இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை!

   -MMH

   2017ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தைப்புரட்சிக்குப் பிறகு, காலம்காலமாக நடந்துவரும் மஞ்சுவிரட்டினை ஜல்லிக்கட்டு போல் வாடிவாசல் அமைத்து நடத்துமாறு அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்துவதால், கடந்த சில ஆண்டுகளாக மஞ்சுவிரட்டு என்பது ஜல்லிக்கட்டாக மாற்றப்பட்டுவிட்டது. 

மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைமாடுகள் மஞ்சுவிரட்டில் பங்கேற்க வரும்பட்சத்தில், அவற்றிற்கு புதிய நடைமுறையான டோக்கன்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

எனவே, பலர் தங்களின் மாடுகளை அருகிலுள்ள கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் அவிழ்த்துவிட்டுச் செல்வதால் போதிய பாதுகாப்பின்றி விபத்துகள் ஏற்படுகின்றன. காலம்காலமாக ஊர் கமிட்டியாளர்கள் பாரம்பரிய வழக்கப்படி நடத்தும்போது இவ்வாறான விபத்துகள் நடக்கவில்லை. மேலும் மஞ்சுவிரட்டு ஜல்லிகட்டாக மாற்றப்பட்டால் காப்பியங்களில் பாடப்பட்ட மஞ்சுவிரட்டு விரைவில் அழிந்துவிடும்.

இதனால் மஞ்சுவிரட்டை மீட்டெடுக்கும் வகையில், 'மஞ்சுவிரட்டு பாதுகாப்பு மாநாட்டினை' தமிழக மக்கள் மன்றத்தினர் மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த ஞாயிறன்று (02/01/2022) மாலை திருப்பத்தூர் காசிம் மண்டபத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு பாதுகாப்பு மாநாட்டில், மஞ்சுவிரட்டு நடத்தும்  ஊர் கமிட்டியார்கள், மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள், சமூக நல அமைப்பினர், வடமாடு நலச்சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டு குறித்து கலந்தாய்வு செய்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

மாநாட்டில் மக்கள் மன்றத்தின் தலைவர் ச.மீ.இராசகுமார் பேசும்பொழுது, “அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதிகளில் ஊரின் நடுவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால் வீடுகளுக்குள் மாடுகள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக பக்கவாட்டில் கம்புகளைக் கட்டி, வாடிவாசல் அமைக்கப்படும். மேலும், அங்கே ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்படும் காளைகள் சாலையில் ஓடுவதால் மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளுக்கும் அடிபடாமலும், காயம் ஏற்படாமலும் இருக்க தேங்காய் நார்கள் போடப்படும். வெறும் முப்பதடி தூரத்திற்குள் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்துவிடும். ஆனால், மஞ்சுவிரட்டு என்பது ஊரின் வெளியே கண்மாய் அல்லது மஞ்சுவிரட்டு பொட்டலில் நூறு ஏக்கர் பரப்பளவில் புல்தரையில் திறந்தவெளியில் நடத்தப்படும்.

சமீப வருடங்களில் மஞ்சுவிரட்டிலும் 'ஜல்லிக்கட்டுபோல் பக்கவாட்டில் கம்புகளைக் கட்டி, தேங்காய் நார் போட்டு நடத்துங்கள்' என்று  அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகிறார்கள். மேலும், மதிய வேளையில் நடந்துவந்த மஞ்சுவிரட்டை ஜல்லிக்கட்டுபோல் காலை நேரத்திலும், துண்டு மணி கட்டி ஓடும் காளைகளை ஜல்லிக்கட்டு காளை போல் வெறும் கழுத்திலும் நடத்தச் சொல்வதால் எங்களின் பாரம்பரிய மஞ்சுவிரட்டு இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் வாணியம்பாடி, வேலூர் பகுதிகளில் நடக்கும் எருதுகட்டுகளில் அவ்வாறு ஜல்லிக்கட்டு முறையினைத் திணிக்கவில்லை. 

சிவகங்கை, இராம நாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட இடங்களில் மஞ்சுவிரட்டு, வடமாடு, வண்டிப்பந்தயங்கள் நடந்து வருகிறது.

இங்கெல்லாம் நடத்துபவர்கள் மீது குற்றச்செயல்போல் பண்பாட்டு விழாக்களுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களில் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லில்கட்டுக்கான செலவினை அரசே ஏற்று நடத்துகிறது. ஆனால் அரசுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறாவயல், அரளிப்பாறை, கண்டிப்பட்டி, நெடுமறம் போன்ற மஞ்சுவிரட்டுகளுக்கு, விழா நடத்துபவர்களே பல லட்சங்களை செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இதற்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டு அரசிடம் கோரிக்கை வைப்பதற்காக இந்த மாநாட்டை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். இதனை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தலைமச் செயலாளர் உள்ளிட்ட பலருக்கும் வழங்கவிருக்கின்றோம்' என்றார்.

இம்மாநாட்டிற்கு தலைமையேற்ற இயக்குனரும், தமிழ்ப்பேரரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான கவுதமன் பேசுகையில், "மரபுவழியில் மஞ்சுவிரட்டினை நடத்த அரசு உடனடியாக ஆணையிட வேண்டும். இல்லாவிடில் இந்த ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு நடைபெறும் சிறாவயலில், வருகின்ற தை மூன்றாம் தேதி பாரம்பரியத்திற்கு எதிராக வாடிவாசல் அமைத்தால் மக்களைத் திரட்டி சிறாவயலில் போராட்டம் நடத்துவோம்' என்றும் தெரிவித்தார்.

மாநாட்டில், 'பாரம்பரிய முறைப்படி மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், அனைத்து மஞ்சுவிரட்டு, வடமாடு, வண்டிப்பந்தயம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யக்கூடாது, அரசிதழில் அனைத்து மஞ்சுவிரட்டுகளும் சேர்க்கப்பட்டு அவற்றை அரசே செலவு செய்து நடத்த வேண்டும், இந்த வீரவிளையாட்டின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, தேசிய விளையாட்டின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசு வழங்கும் இழப்பீட்டிற்கு இணையாக வழங்க வேண்டும், தேசிய விளையாட்டில் இடம்பெறச் செய்யவேண்டும், மெரினா கடற்கரையில் நாட்டு காளைமாடு சிலை அமைக்க வேண்டும், பாடப் புத்தகங்களில் இவ்வீர விளையாட்டுகளின் வரலாற்றினைச் சேர்க்க வேண்டும், திரும்பப்பெறாத ஜல்லிக்கட்டு வழக்குகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும், 2019இல் திருத்தப்பட்ட தமிழ்நாடு கால்நடைச் சட்டத்தில் நாட்டு மாடுகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட திருத்தங்களை மாற்றவேண்டும், ஆவின் மூலம் பெறப்படும் நாட்டு மாட்டுப்பால்களுக்கு அதிகவிலை கொடுத்து வாங்கி விற்கவேண்டும், ஆண்டுதோறும் பட்ஜெட்டில் இந்த பண்பாட்டு விழாக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்' போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போராட்டங்களில் பங்குபெற்ற போராட்டவாதிகளுக்கு பாராட்டு கேடயமும் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருணகிரி, வடமாடு நலச்சங்கத் தலைவர் அந்தோணிமுத்து, சிங்கம்புணரி ஜெயந்தன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கண்ணகி, லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் நெல்லை ஜீவா, செ.கர்ணன், ஜல்லிக்கட்டு ராஜேஷ், இமயம் சரவணன், ஜல்லிக்கட்டு ரஞ்சித், இளஞ்சென்னியன் உள்ளிட்ட பலரும் சிறப்புரை ஆற்றினார்கள். ஏர் ஏறு அமைப்பினைச் சேர்ந்த கோ.முரளி நன்றி தெரிவித்தார்.

- ராயல் ஹமீது.

Comments