கோவையில் ஓட்டுப்பதிவு குறைந்தது எதனால்?

 

-MMH

    கோவை மாநகராட்சியில், 7 லட்சத்து 81 ஆயிரத்து 802 ஆண்கள்; 7 லட்சத்து 83 ஆயிரத்து 56 பெண்கள்; 300 மூன்றாம் பாலினத்தவர் என, 15 லட்சத்து 65 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், 4 லட்சத்து 21 ஆயிரத்து 164 ஆண்கள்; 4 லட்சத்து 17 ஆயிரத்து 873 பெண்கள்; 72 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 8 லட்சத்து 39 ஆயிரத்து 109 பேரே ஓட்டளித்துள்ளனர்.

இது, 53.61சதவீதம்.ஆனால், 2011 தேர்தலில், 59.57 சதவீதத்தினர் ஓட்டளித்தனர். இதனால், வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.வார்டு மறுவரையறையில் எல்லை மாற்றப்பட்டு, வீதிகள் பலவும் வெவ்வேறு வார்டுகளில் சேர்க்கப்பட்டிருந்தன. பழைய ஓட்டுச்சாவடிக்கு சென்றவர்களை, 'உங்களுக்கு இந்த பூத் கிடையாது; பக்கத்து பூத்துக்கு போங்க' என, திருப்பி அனுப்பியதால், பெரும்பாலானோர் ஓட்டுப்போடாமல் திரும்பிச் சென்றனர். ஏராளமானோருக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை.இதுதவிர, வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்போர் மற்றும் தங்களது ஆதரவாளர்களுக்கு மட்டுமே ஓட்டுக்கு பணம் வழங்கும் நடைமுறையை அரசியல் கட்சியினர் இதுநாள் வரை பின்பற்றினர்.

இம்முறை ஆயிரக்கணக்கில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வீடு வீடாக வந்து வழங்கியதை, நடுநிலை வாக்காளர்கள் விரும்பவில்லை.இன்னொரு முக்கிய பிரச்னை, வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவு அதிகமாக இருந்தது. இறந்த வாக்காளர்கள் நீக்கம் செய்யப்படாமல் உள்ளனர். இடம்பெயர்ந்தவர்களையும் நீக்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத காரணத்தால், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரித்தால் மட்டுமே, ஓட்டுப்பதிவு விபரங்கள் உண்மையானதாக இருக்கும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments