குளமா - ரோடா என அரசு அதிகாரிகள் தெளிவு படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!!

 

-MMH

   பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி அருகே, சில மாதங்களுக்கு முன் துார்வாரப்பட்ட குளத்தை, சிலர் மூட முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.பொள்ளாச்சி - பனிக்கம்பட்டி ரோடு, டி.கோட்டாம்பட்டி கழிப்பிடம் எதிரே மழைநீர் தேங்கும் குளம், பாதாள சாக்கடை திட்டப்பணியில், கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பதற்காக, மண் போடப்பட்டு மூடப்பட்டதாக கூறப்படுகிறது. 

கடந்த செப்., மாதம் தமிழக முதல்வரின் மெகா துாய்மை முகாமில், குளம் தூர்வாரி மண் கழிவுகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், சிலர் அந்த குளத்தை மூட முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆனாலும், குளத்தை மூடும் பணி நிறுத்தப்படாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.ஒரு தரப்பினர் கூறுகையில், 'சர்வே எண், 12ல் குரும்பம்பாளையம் ரோடாகவும், சர்வே எண், 13ல், குளமாக இருந்தது. தற்போது, 72 சென்ட் ரோடாக மாறியது எப்படி என தெரியவில்லை. கழிவுநீர் உந்து நிலையத்தில் முறையாக, 'பம்பிங்' செய்யாததால் குளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுக்க வேண்டும்,' என கோரிக்கை எழுந்துள்ளது.மற்றொரு தரப்பினர், 'அரசு ஆவணங்களின்படி, இந்த இடத்தில் குளம் இல்லை; ரோடு தான் இருந்தது. அதற்கான ஆவணங்கள் உள்ளன. குளத்தில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரம் பாதிக்கிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.தெளிவுபடுத்துங்க!குளம் இருந்ததாக கூறி பல லட்சம் ரூபாய் செலவு செய்து, நகராட்சி அதிகாரிகள் துார்வாரினர்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில், ஒரு சிலர் மண் கொட்டி, 'பொக்லைன்' கொண்டு குளத்தை மூட திட்டமிடுகின்றனர். இது, அதிகாரிகளுக்கு தெரிந்து நடக்கிறதா; அல்லது, தேர்தல் பணியில் அதிகாரிகள் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி, சிலர் குளத்தை மூடுகின்றனரா என்பது, புரியாத புதிராக உள்ளது.இந்த இடத்தில் குளம் இருந்ததா அல்லது ரோடு இருந்ததா, என, அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். குளத்தை மூடும் முயற்சியை தடுக்க வேண்டும். அங்கு கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், மழைநீர் சேமிப்பு குளமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments