சின்னமாவிற்கு துரோகம் செய்த அதிமுக- மக்கள் கொடுத்த அடி இது-கருணாஸ்..!!

   -MMH 

   துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள், அதிமுகவிற்கு தோல்வியை பரிசாக தந்த மக்களுக்கு நன்றி என முக்குலத்தோர் புலிகள் படையின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் முக்குலத்தோர் புலிகள் படைகளின் தலைவர் கருணாஸும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கொங்கு மண்டலம் சங்கு ஊதிவிட்டது.

அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வென்றுள்ளது. அதிமுக சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.க வின் கோட்டை என்று பிதற்றிக் கொண்டிருந்த எடப்பாடிக்கு கொங்கு மண்டலமே சங்கு ஊதிவிட்டது. அதிமுகவிற்கு தோல்வியை கொடுத்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்விக்கு காரணம் துரோகம்தான்.

அதிமுக தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? துரோகம்தான். பக்கத்திலேயே இருந்தோர்க்கு செய்தத் துரோகமும், தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகமும்தான் காரணம். அதிமுக தோல்வி மக்கள் தந்த பரிசு மட்டுமல்ல, சிறந்த பதிலும்கூட. நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அதிமுகவின் துரோகங்களைப் பட்டியலிட்டு அறிக்கை விட்டிருந்தேன். ஆனால் மக்கள் நான் எதிர்ப்பார்த்ததைவிட கூடுதலான தோல்வியை அதிமுகவிற்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடக்கம்தான் இன்னும் பல்வேறு விளைவுகளையும் தோல்விகளையும் அதிமுக எதிர்காலத்தில் சந்திக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை எடப்பாடி, ஓ.பி.எஸ். கூட்டணியே உடைத்து சுக்குநூறாக்கும், அவர்கள் அம்மாவிற்கு செய்யும் பாவமும், சின்னம்மாவிற்கு செய்த துரோகமும் இனி அவர்களை துரத்திக்கொண்டே இருக்கும்.

துரோகம் செய்தோர் தோல்வியைத்தான் சந்திப்பார்கள் அ.இ.அ.தி.மு.க.விற்கு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை பரிசாகவும், பதிலாகவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.Comments