பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்! "புட்செல்" கோபிநாத் நடவடிக்கை!!

   -MMH 

   பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்ததுடன், மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் காலை 6 மணிக்கு பாலக்காடு ரோடு நல்லூர் வனத்துறை சோதனை சாவடி அருகே வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது.

உடனே போலீசார் லாரியை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் மதுரையை சேர்ந்த அழகு (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்கு பின் முரணான பதிலையும் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.

அப்போது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்பதும், சிவகங்கையில் இருந்து கேரளாவுக்கு கடத்திச்செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து 19 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்ததுடன், லாரி டிரைவர் அழகுவையும் கைது செய்தனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கையை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் முருகன், லாரி உரிமையாளர் கோபால் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

-துல்கர்னி உடுமலை.

Comments