இந்தியாவிற்குள் 40 லட்சம் பேல் பஞ்சை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்! - தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் கோரிக்கை

   -MMH 

  உக்ரேன் - ரஷ்யா போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர வாய்ப்புள்ள நிலையில், இந்தியாவிற்குள் 40 லட்சம் பேல் பஞ்சை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சங்கத்தின் தலைவர் ரவி சாம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராஜூ ஆகியோர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். பஞ்சு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதின் காரணமாக, நடப்பாண்டில் பஞ்சு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தனர். நடப்பாண்டில் 340 முதல் 350 லட்சம் பேல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழை காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், இதனை எதிர்கொள்ளும் வகையில் உடனடியாக 11 சதவீதமாக உள்ள பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்துவிட்டு, 40 லட்சம் பேல்களை இறக்குமதி செய்து கையிருப்பில் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பஞ்சாலைகளின் நலன்களை கருத்தில் கொண்டு இ.எல்.எஸ் எனப்படும் செயற்கை இழை பஞ்சுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

உக்ரேன் - ரஷ்யா போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர வாய்ப்புள்ள நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு சற்றே நிமிர்ந்து வரும் தொழில்துறையினரை பாதுகாக்க அரசு இந்த இறக்குமதி வரியை ஒரு முறை மட்டுமேனும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இல்லையென்றால் வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள், தறி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments