அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு போலீஸ் வலைவீச்சு!!

   -MMH 

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 64). இவர் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு வாணியம்பாடியை சேர்ந்த பிரகாஷ் (50) என்பவர் அறிமுகமானார். 

அரசியல் ரீதியாக பலரை தெரியும் என்பதால் ரூ.10 லட்சம் கொடுத்தால் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கிளார்க் வேலை வாங்கி தருவதாகவும், யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று பிரகாஷ் கூறி உள்ளார்.

இதை நம்பிய போஸ் கோவையை சேர்ந்த ஜான், தட்சணாமூர்த்தி, செல்வராஜ் ஆகிய 3 பேரை பிரகாசிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.  

அவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பிரகாஷ் கூறியதாக தெரிகிறது. அதை நம்பி அவர்கள் ரூ.15 லட்சத்தை முதற்கட்டமாக பிரகாஷிடம் கொடுத்து உள்ளனர்.

இது போல் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோகன்தாஸ் என்பவரிடம் ரூ.5 லட்சம், செந்தில்ராஜ் என்பவரிடம் ரூ.3 லட்சம் என மொத்தம் 5 பேரிடமும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.23 லட்சத்தை பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கி தரவில்லை.

இது குறித்து போஸ் பல முறை கேட்டும் பிரகாஷ் உரிய பதில் அளிக்க வில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள், போசிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. 

அதன்பிறகும் பிரகாஷ் பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். மேலும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. 

இது குறித்து போஸ் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments