பருத்தி விலையை கட்டுப்படுத்தாவிட்டால் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் முடங்கும் - ஜவுளித்துறையினர் வேதனை!!

   -MMH 

   கோவை பருத்தி விலை அபரிமிதமாக அதிகரித்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும் என்றும் ஜவுளித்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய ஜவுளி உற்பத்தி சம்மேளன தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ரவி சாம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்

"ஜவுளித்தொழில் இக்கட்டான சூழலில் உள்ளது. பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ஒரு கண்டி பஞ்சு ரூ.45 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது ஒரு கண்டி ரூ.95 ஆயிரத்திற்கு விற்பனையகிறது அயல் நாட்டு நிறுவனங்களும், பெரிய ஜின்னிங் பேக்டரிகளும், வியாபாரிகள் பதுக்கி வைத்திருப்பதே இதற்கு காரணம். இப்படி விலை அதிகமாக உள்ள பருத்தியில் தயாராகும் நூலை இங்குள்ள சிறு குறு நிறுவனங்கள் வாங்கி ஆடை தயாரிக்க முடியாது. இதனல் ஜவுளித் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும். மேலும், வேலை இழப்பு ஏற்படும்.

பருத்தி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

ஆனால், சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். எனவே யாரிடம் எவ்வளவு பருத்தி உள்ளது என்பதை வெளிப்படையாக  ஜவுளித்துறையிடம் தெர்விக்க வேண்டும். பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனை நீக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்தாண்டு 30 முதல் 40 லட்சம் பேல் பருத்தியை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் விலையேற்றத்தால் தொழில் முடங்கி நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்றப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் முற்றிலும் முடங்கிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களாக மாதந்தோறும் விலையேறி வருகிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்ய முடியும்.

தமிழகத்திற்கு ஆண்டுக்கு 145 பேல்கள் பருத்தி தேவைப்படுகிறது. நாங்கள் நாடு முழுவதிலுமே வெறும் 30 லட்சம் பேல்களுக்கு வரி விலக்கு மட்டுமே கேட்கிறோம். தொழில் உற்பத்தி முடங்கினால் ஜவுளி நிறுவனங்கள் திவலாகும். இதனால் வங்கிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இது தொடர்பாக வரும் 4ம் தேதி ஜவுளித்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம்". என தெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments