இரிடியம் என செங்கலை கொடுத்து 30 லட்சம் மோசடி!!

   -MMH 

  கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் விடுதியில் இரிடியம் என செங்கலை கொடுத்து 30 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் சமீபமாக நூதன மோசடிகள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வழியாக மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில், இரிடியம், கோயில் கலசம், மண்ணுளி பாம்பு போன்ற பெயர்களிலும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்தநிலையில் கோவையில் இரிடியம் என தெரிவித்து செங்கலை கொடுத்து 30 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த மனோகரன் என்ற 60 வயது முதியவர் நேற்று முன்தினம் இரவு கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது மனோகரனின் அறைக்கு வந்த நபர்கள் மனோகரனிடம் இரிடியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன் மதிப்பு 30 லட்சம் என்றும் கூறி உள்ளனர். தொடர்ந்து ஆசை வார்த்தையை கூறிய அவர்கள் தாங்கள் வைத்திருக்கும் பெட்டிக்குள் இரிடியம் இருப்பதாகவும், அதை உடனடியாக பார்க்காமல் சிறிது நேரம் கழித்து திறந்து பார்க்கும் படி தெரிவித்துள்ளனர். இதை அவர் நம்பும் படியாக பேசியுள்ளனர்.

பின்னர் நம்பிய முதியவர் மனோகர் 30 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இதை பெற்றுக்கொண்ட 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து லாவகமாக சென்றனர். பின்னர் முதியவர் பெட்டியை திறந்து பார்த்தபோது பெட்டிக்குள் செங்கல் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையம் சென்றார்.

காவல்நிலையத்தில் புகார் தொடர்பாக தகவலை தெரிவித்த அவர் வந்தவர்களின் அடையாளம் மற்றும் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் முருகானந்தம் மற்றும் கண்ணப்பன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

-சுரேந்தர்.

Comments