சாலைகள் விரிவாக்கம் மற்றும் புதிய பாலங்கள் கட்டுவதில், தமிழக அரசு நிலை.?

 

-MMH

சாலைகள் விரிவாக்கம் மற்றும் புதிய பாலங்கள் கட்டுவதில், கோவையிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடிகளை அள்ளித்தரும் நிலையில், மாநில நெடுஞ்சாலையில் அவசியமான பாலம் கட்டவும் நிதி ஒதுக்க மாநில அரசு மறுத்து வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக கோவையின் மீது, மத்திய, மாநில அரசுகளின் கவனம் திரும்பி, சாலைகள் விரிவாக்கம், புதிய பாலங்கள் போன்ற கட்டமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.அதிலும் 2016க்குப் பின்பே, கோவை மிகச்சிறப்பாகக் கவனிக்கப்பட்டது.கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பழனிசாமி, வேலுமணி போன்றவர்கள், முதல்வர், உள்ளாட்சித்துறையின் அமைச்சர் என ஆட்சி அதிகாரத்தில் முக்கியப் பதவிகளில் இருந்ததே இதற்கு முழு முதற்காரணமாக இருந்தது. 

அப்போது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால், கோவைக்கு பல திட்டங்களும், நிதியும் வாரி வழங்கப்பட்டன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு கோவையில் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றைத் தவிர்த்து, சாலைகள், புதிய பாலங்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ரோடு, 500 கோடி மதிப்பில், சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் ரோடும் அகலப்படுத்தப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைகளான திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில், பல கோடி மதிப்பில், சுங்கம், கவுண்டம்பாளையம் மற்றும் துடியலுார் ஆகிய இடங்களில், புதிய பாலங்கள் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டுள்ளன.

தற்போது சிங்காநல்லுார், சாய்பாபா காலனி மற்றும் சரவணம்பட்டி ஆகிய இடங்களில், ரூ.280 கோடி மதிப்பில் மூன்று பாலங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மேட்டுப்பாளையத்துக்கு புதிய பை-பாஸ், பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம், திருச்சி ரோட்டில் 'எல் அண்ட் டி' பை-பாஸ் கடக்கும் சுங்கம் சந்திப்பிலிருந்து பாப்பம்பட்டி பிரிவு வரையிலுமாக 2.6 கி.மீ., நீளத்துக்கும், சுந்தராபுரம் சந்திப்பில் 900 மீட்டர் நீளத்துக்கும், கணபதியில் டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து 2.4 கி.மீ., நீளத்துக்கும் மூன்று புதிய பாலங்கள் கட்டவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த ஐந்து திட்டங்களுக்கும் சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் இந்தப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு, கோவைக்கு மட்டுமே சாலை மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. முந்தைய அ.தி.மு.க., அரசு, இந்தப் பணிகளையும் மாநில அரசின் சாதனையாக பறைசாற்றிக் கொண்டது. ஆனால் அதே அரசு, பொள்ளாச்சி ரோட்டில் உக்கடம் மேம்பாலம் கட்டவும், அவிநாசி ரோட்டில் 10.5 கி.மீ., பாலம் கட்டவும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும் இன்று வரை, ஒரு பாலத்துக்கும் நிதி ஒதுக்கவில்லை.

குறிப்பாக, தடாகம் ரோட்டில் தீராத போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள லாலி ரோடு சந்திப்பில், புதிதாகப் பாலம் கட்டுவதற்கு, பல முறை பரிந்துரை அனுப்பியும் அதற்கு நிதி ஒதுக்கவே இல்லை. அதேபோன்று, அவிநாசி ரோடு பாலத்தை நீலம்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரையும் ஏற்கப்படவில்லை. கோவையை நாங்கள் எந்தவிதத்திலும் புறக்கணிக்கவில்லை என்று, முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் மத்திய அரசு இப்படி கோவைக்கு அள்ளிக் கொடுக்கும் நிலையில், மாநில அரசு ஒரே ஒரு பாலத்துக்கு நிதியைக் கிள்ளிக் கொடுக்கவும் மனமில்லாமல் இருப்பது, இந்த புறக்கணிப்பை மறுபடியும் ஊர்ஜிதமாக்கியுள்ளது.

-சுரேந்தர்.

Comments