அசைவ உணவு".. இந்த பாஜகவால் நாட்டுக்கே தலைகுனிவு.. அடங்காத மதவெறி, வன்முறை.. கொந்தளிக்கும் சீமான்.

   -MMH 

  சென்னை: பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்திய பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழான செயல்களாகும் என்றும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் தொடுத்திட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

ராமநவமியை முன்னிட்டு விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் மாணவர் குழுக்களுக்கிடையே மோதல் வெடித்தது.. இதில் 6 பேர் காயமடைந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அசைவ உணவு சமைக்கப்பட்டது... அதனை உண்ண சென்ற மற்ற மாணவர்களை ஏ.பி.வி.பி அமைப்பு மாணவர்கள் தடுத்து வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர்.

அதையும் மீறி சாப்பிட சென்றவர்களை கடுமையாக தாக்கினர். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதனால், ஜே.என்.யூ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி, மற்ற அமைப்பு மாணவர்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

உணவு எனும் தனிமனித உரிமையில் தலையிட்டு, அதற்காகத் தாக்குதல் தொடுத்திருக்கிற பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.. உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களைச் சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து, இடையூறு செய்வதும், அதனைக் காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச்செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல.

இவையாவும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறலாகும். பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்தியப்பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழான செயல்களாகும்.

எனவே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் தொடுத்திட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கல்லூரியின் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments