சாலையில் தோண்டப்படும் குழிகளை சரி செய்யாத அந்தந்த துறை அதிகாரிகளை தண்டிக்க பொதுமக்கள் கோரிக்கை!!

   -MMH 

   மோட்டார் வாகனச்சட்டத் திருத்தத்தின்படி, கோவை நகரில் விபத்துக்குக் காரணமாக இருக்கும் அரசுத்துறை அதிகாரிகள் மீது  சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும், கடந்த ஆண்டில் 102 உயிரிழப்பு விபத்துகள், 747 உயிரிழப்பு அல்லாத விபத்துகள் நடந்துள்ளன. நகரில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு, ரோடுகளின் மோசமான நிலையே காரணமாக உள்ளது.ரோடுகள் பள்ளம், மேடாக இருப்பது, ரோட்டுக்கும், சாலையோரத்துக்குமான உயர வித்தியாசம், விதிகளின்படி அமைக்கப்படாத வேகத்தடைகள் என, ரோடுகளின் பொறியியல் குறைபாடுகளால்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.

அடுத்ததாக சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரிகள், சாலை விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மாறி, மாறி தோண்டும் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், குடிநீர் திட்டங்கள், தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பு, புதை மின் வடம், பைப் லைன் காஸ் என பல்வேறு பணிகளுக்காக, கோவை நகரில் ரோடுகள் தோண்டப்படுவது, அன்றாடச் சடங்காக நடந்து வருகிறது. ஒவ்வொரு ரோட்டிலும் பல்வேறு விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்ட பின்பே, ரோட்டைச் சீரமைப்பது வாடிக்கையாக உள்ளது.

வீடுகளுக்கு குழாய் காஸ் இணைப்பு தருவதற்கான குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட மருதமலை ரோடு, கவுண்டம்பாளையம்-இடையர்பாளையம் ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளை, இதற்கு சிறந்த உதாரணங்களாகக் காட்டலாம். இந்தப் பணி மாதக்கணக்கில் இழுப்பதால், சம்பந்தப்பட்ட ரோடுகளைச் சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக, மருதமலை ரோட்டில், நவாவூர் பிரிவிலிருந்து வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா வரையிலான ரோட்டில், ஒரே ஒரு வாகனம் செல்லும் அளவில் மட்டுமே, தார் ரோடு உள்ளது.பஸ்கள், கார்கள் வேகமாக வரும்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள், மண் ரோட்டில் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் அங்கு தினமும் ஐந்தாறு விபத்துக்கள் நடக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் 50க்கும் மேற்பட்டோர், காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'இந்தியன் ஆயில் நிறுவனம், பணியை இன்னும் முடிக்காததால், ரோட்டைச் சீரமைக்க முடியவில்லை. ஐந்து கடிதங்கள் எழுதியும் ஒரு பயனுமில்லை' என்கின்றனர். இது ஓர் உதாரணம் மட்டுமே. இதுபோல ஒவ்வொரு ரோட்டிலும் விபத்து நடக்கவும், உயிரிழப்பு ஏற்படவும் ஏதாவது ஒரு துறை அதிகாரிகள், காரணமாக உள்ளனர்.

மாநகராட்சி ரோடுகளில் நெடுஞ்சாலை விதிகளுக்கு முரணாக பெரிது பெரிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிலுமே வர்ணம் பூசப்படுவதில்லை. இதனால் தினமும் நுாற்றுக்கணக்கான இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.

மோட்டார் வாகனச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி, இத்தகைய விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமான அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments