ஆப்பிரிக்க பெண்ணை மணந்த கோவை வாலிபர்! இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமணம்!!

 

-MMH

  கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம்- தர்மலட்சுமி. இவர்களது சொந்த ஊர் கோவில்பட்டி. இவர்களது மகன் முத்து மாரியப்பன்(வயது30). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேம்ரூனிற்கு சென்று அங்குள்ள ஆயில் மற்றும் கியாஸ் நிறுவனத்தில் சி.என்.சி. மெஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்தவர் எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகள் வால்மி இனாங்கா மொசொக்கே (26).

பணிபுரியும் இடத்தில் இருவருக்கும்  இடையே காதல் மலர்ந்தது. கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிக்க விரும்பினர். தங்களது காதலை பெற்றோருக்கு தெரிவித்தனர்.இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.   இந்த நிலையில்   கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு வந்து தான் விரும்பிய முத்து மாரியப்பனை  இந்து முறைப்படி  தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்கு மாப்பிள்ளை வீட்டிலும் சம்மதம் கிடைத்தது. கோவையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

இந்த  நிலையில் மணமகளின் தாயார், பெரியப்பா மொக்கோசோ லூக்காஸ் ஜேம்ஸ், அவரது மனைவி ஷோபி எஞ்சே நமொன்டோ உள்ளிட்ட உறவினர்கள் 10 பேர் இந்தியாவந்தனர். நேற்று கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ  இந்து முறைப்படி திருமணம் களை கட்ட தொடங்கியது.

இதில் ஆப்பிரிக்க மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கு பட்டுபுடவை கட்டி, அவரை மலர் பந்தலின் கீழ் ஊர்வலமாக மணமேடைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது உறவினர்கள் நமது பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்தவாறு வந்தனர். தொடர்ந்து புரோகிதர் வேத மந்திரம் ஓத, ஆப்பிரிக்க மணப்பெண்ணுக்கு, தமிழக மணமகன் முத்து மாரியப்பன் தாலி கட்டினார்.  தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டு அம்மி மிதித்து மெட்டி அணிவித்தார்.

அதேபோல் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தனர். தொடர்ந்து உறவினர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டு குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். பின்னர்  திருமணம் முடிந்த  கோலத்தில் மணமேடையில் இருந்தவாறு, மணமகள் பேசும்போது, வணக்கம் என தமிழில் தொடங்கினார். தொடர்ந்து அவர்,  இந்திய கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியர்களையும் பிடிக்கும். அதனால் இந்து முறைப்படி திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். எனது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் இந்தியா வந்து திருமணம் செய்து கொண்டேன். இதன் மூலம் நானும் இந்தியாவில் ஒருவர்  ஆகி விட்டேன். நான் நினைத்தது நடந்து விட்டது. எனது கனவு பலித்து விட்டது. இந்த நிகழ்ச்சி எனது வாழ்வில் மறக்க முடியாத மிகவும் மகிழ்ச்சி ஆகும் என்றார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆப்பிரிக்க மணமகளின் உறவினர்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியமாக பார்க்க வைத்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவைமாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்..

Comments