விதிமுறைகளுக்கு புறம்பாக பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர்-ஹாரன் பறிமுதல்! போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி!!

-MMH

             பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். இந்த சத்தம் அதிகமாக கேட்பதால் சாலையோரங்களில் செல்வோர் அச்சம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். பொள்ளாச்சி பகுதிகளில் இயக்கப்படும் பஸ்கள், மினி பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. 

இந்தநிலையில் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். விதிமுறையை மீறி பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தியது தெரியவந்தது. 18 பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதற்கிடையில் ஒரு தனியார் பஸ்சில் டிரைவர் இருக்கைக்கு எதிரே முன்பக்க கண்ணாடி பகுதியில் விதிமுறையை மீறி பயணிகள் உட்கார அமைத்த இருக்கை அகற்றப்பட்டது. ஏர்ஹாரன் பறிமுதல் செய்யப்பட்ட அரசு, தனியார் பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். 

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த ஒரு அரசு பஸ்சில் ஹாரன் இருந்தும் அடிக்கவில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு பஸ்களில் ஹாரன், பிரேக் சரியாக உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments