கோவை ரயில் நிலைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமராக்களை அதிகரிக்க முடிவு !!

-MMH

         கோவை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை, 250 ஆக உயர்த்துமாறு ரயில் பயணிகள் வசதிகள் கேட்பு கமிட்டி வலியுறுத்தியுள்ளது.ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில் பயணிகள் வசதிகள் கேட்பு கமிட்டி உறுப்பினர்கள், கடந்த இரு நாட்களாக கோவை மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு செய்தனர். ரவிச்சந்திரன், அபிஜத் தாஸ், கோட்டாலா உமாராணி, கைலாஷ் லட்சுமன் வர்மா, திலீப்குமார் மாலிக் ஆகிய ஐந்து உறுப்பினர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை அடுத்து, நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷனில் குழுவினர் ஆய்வு செய்தனர். பிளாட்பார்ம் 1'ஏ' சென்ற குழுவினர் அங்கு வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளுடன் கலந்துரையாடினர்.தொடர்ந்து, பிளாட்பார்மில் செயல்படும் உணவகங்கள், ஐ.ஆர்.சி.டி.சி., ஓய்வறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர். 

ஆய்வுக்கு பின், ஸ்டேஷனில், 80 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 'ஏ பிளஸ்' அந்தஸ்துள்ள ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்புக்கு, 250 கேமிராக்கள் இருக்க வேண்டும். உடனடியாக கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, ரயில்வே உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.ஆய்வை முடித்துக்கொண்டு குழுவினர் திருப்பூர் புறப்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments