விவசாயிகளின் நலனுக்காக தமிழில் செயலி! அறிமுகம் செய்கிறது பிக்ஹாட்!

   -MMH 

   கோவை விவசாயிகளின் நலனுக்காக தமிழில் செயலி! அறிமுகம் செய்கிறது பிக்ஹாட்! இப்பிராந்தியத்தில் உள்ள ஒட்டுமொத்த வேளாண் சமூகத்தினருக்கு இச்செயலி பயனுள்ள சேவையை வழங்கும். 

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல், வேளாண் உட்பொருட்கள் செயல்தளமான பிக்ஹாட் தமிழ் மொழியில் ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. தரவுகள், தொழில்நுட்பம் மற்றும் பயிர் அறிவியல் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கி இப்பிராந்தியத்திலுள்ள விவசாயப் பெருமக்கள் திறனதிகாரம் பெறச் செய்வதே இச்செயலி அறிமுகத்தின் நோக்கமாகும். 

இப்பிராந்தியத்தில் வேளாண்மை செழுமையாக நடைபெறுகிறது. இப்பிராந்தியத்தில் வசிக்கும் சுமார் 35 விழுக்காட்டு மக்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பரப்பு ஏறக்குறைய 165260 ஹெக்டேர்கள் ஆகும். இங்கு சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படும் முக்கியப் பயிர்களாக இருக்கின்றன.பிக்ஹாட் நிறுவனத்தின் இணை-நிறுவனரும், இயக்குனருமான திரு. சச்சின் நந்வானா இதுபற்றி கூறியதாவது: “சரியான, விவேகமான முடிவை விவசாயிகள் எடுப்பதற்கு உதவுவதற்காகவே பிக்ஹாட் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் அறுவடைக்கு முந்தைய நிலையிலிருந்து, அறுவடைக்கு பிந்தைய நிலை வரை சாகுபடி செய்யும் தங்களது பயிர்களுக்கான தேவைகளை விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியும். பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கவும், விளைச்சலையும் மற்றும் பயிரின் தரத்தையும் அதிகரிக்கவும் தரமான ஆலோசனைக் குறிப்புகளை இச்செயலி உரிய நேரத்திற்குள் வழங்கும். பயிரின் சாகுபடி காலம் முழுவதிலும் விவசாயிக்கு அவருக்கெனவே பிரத்யேகமான ஆலோசனைகளை இச்செயலி வழங்கும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். தங்களது சொந்த தாய்மொழியான தமிழில் இதன் வாசகங்களை விவசாயிகள் எளிதாக வாசிக்கவும், தங்களது அறிவை இன்னும் செழுமையாக்கிக் கொள்ளவும் முடியும்,” என்று கூறினார்.தாங்கள் கொண்டிருக்கும் அறிவையும், பெறுகின்ற தகவலையும் பலரும் பயன்படுத்துமாறு தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் கலந்துரையாடவும் “விவசாயிகள் சமூகத்தின் செயல்தளமாகவும்” இச்செயலியைப் பயன்படுத்தலாம். பயனர் முகப்பு பக்கம் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது; சாகுபடி செய்யப்படும் பரப்பளவு, புவிசார்ந்த அமைவிடம் மற்றும் மண்ணின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் என்னென்ன பயிர்களை எப்போது, எப்படி பயிரிடுவது என்று விவசாயிகளுக்கு அறிவியல் ரீதியிலான தகவல்களைப் பெறுவதற்கு இது உதவுகிறது. வேளாண்மையில் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பை தணிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் ஒரு நிகழ்நேர தீர்வை வழங்கும் இச்செயலி, தமிழ் மொழியிலேயே பயிர்களுக்கு விதைப்பு முதல், அறுவடை வரை முழுமையான ஆலோசனைக் குறிப்புகளை வழங்கும். பரிவர்த்தனை மற்றும் நடத்தை சார்ந்த தரவைச் சார்ந்து வேளாண் உற்பத்திப் பொருட்கள் மீதான பரிந்துரைப்புகளையும், பரிந்துரைகளையும் வழங்குவதால் இச்செயலி விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்கும் என்பது நிச்சயம்.திரு. சச்சின் நந்வானா இதுபற்றி மேலும் பேசுகையில், “உணவு தானிய உற்பத்தி அம்சத்தைப் பொறுத்தவரை அதிகபட்ச அளவை தமிழ்நாடு மாநிலம் எட்டிவிட்டது என்று ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டும் நிலையில். விளைச்சலையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்கு இன்னும் சாத்தியமிருக்கிறது என்று வேளாண் அறிவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்விஷயத்தில் பிராந்தியத்திலுள்ள விவசாயப் பெருமக்களுக்கு நல்ல தீர்வுகளை வழங்க நவீன தொழில்நுட்பத்தையும், துல்லியமான தரவுகளையும் கொண்டிருக்கும் பிக்ஹாட் நிறுவனத்தால் உதவமுடியும்.” என்று கூறினார்.அறிமுக விழாவில் திரு.பானு பிரசாத், தலைமை நிர்வாக அதிகாரி, பிக்ஹாட், திரு.புகழேந்தி, பேராசிரியர், தமிழ்நாடு அக்ரி காலேஜ், திரு.சஞ்சீவ ரெட்டி, தலைமை வேளாண் விஞ்ஞானி, பிக்ஹாட் ஆகியோர் உடன் இருந்தனர்.பிக்ஹாட் குறித்து:

பிக்ஹாட், இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வரும் வேளாண் – தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமாகும். விவசாய சமூகத்தினருக்கு முழுமையானத் தீர்வுகளை வழங்குவதில் இந்நிறுவனம் முன்னணி வகிக்கிறது. ஜேஎம் ஃபைனான்ஷியல் இந்தியா டிரஸ்ட் II நிறுவனத்திடமிருந்து ரூ.100 கோடி நிதியினைப் பெற்றிருக்கும் பிக்ஹாட், இந்தியாவெங்கிலும் 6 மில்லியன் விவசாயிகளுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது. தரவுகள், தொழில்நுட்பம் மற்றும் பயிர் அறிவியல் ஆகியவற்றை மிகச்சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் அறுவடைக்கு முந்தைய நிலையிலிருந்த அறுவடைக்குப் பிந்தைய காலகட்டம் வரை வேளாண்மை செயல்பாடுகளை பிக்ஹாட் புரட்சிகரமாக மாற்றியமைத்து வருகிறது. பயிரிடலுக்கான வித்துகள், விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள், ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் வேளாண் சாதனங்கள் என தரமான உட்பொருட்களின் மிகவிரிவான தொகுப்பை உள்ளடக்கிய ஒரு வேளாண் ஸ்டோரையும் பிக்ஹாட் கொண்டிருக்கிறது. 

விவசாயிகளை மையமாகக் கொண்டு நவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்ற தனது செயல்தளத்தின் மூலம் வழக்கமான சில்லறை விற்பனையாளர்களால் ஏற்படுகின்ற சவால்களை பிக்ஹாட் திறம்பட எதிர்கொண்டு தீர்வு காண்கிறது; சிறப்பான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற பிக்ஹாட், இதன் வழியாக வழக்கமான பொருள் வழங்கல் அமைப்பை சீர்குலைத்திருக்கிறது; மேலும் விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற வேளாண் இடுபொருட்களை அதிக விலை கொடுத்து விவசாயிகள்  வாங்குவதையும், தரமற்ற பொருட்களை இவர்களிடமிருந்து கொள்முதல் செய்வதையும் தடுத்திருக்கிறது.  வழக்கமான சில்லரை விற்பனையாளர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதையும் மற்றும் குறைவான வருமானத்தையே விவசாயத்திலிருந்து பெறுவதையும் பிக்ஹாட் தனது செயல்பாட்டின் மூலம் தடுத்து அதிக விளைச்சலைப் பெறவும் மற்றும் விளைபொருட்களுக்கு நல்ல விலையின் மூலம் அதிக வருவாய் பெறவும் உதவுகிறது.

- சீனி,போத்தனூர்.

Comments