பொள்ளாச்சி அருகே புதர் மண்டி கிடைக்கும் கால்வாய்கள்!!

     -MMH 

பொள்ளாச்சி அடுத்துள்ள கிராமங்கள் வழியாக செல்லும் பிஏபி கால்வாய் புதர்மண்டி சேதமடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு பாசனபகுதியில் உள்ள விளைநிலங்கள் பயன் பெறுகின்றன.

பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் பிஏபி கிளை கால்வாய்களில் பல இடங்களில் புதர் மண்டி காணப்படுவதோடு, ஆங்காங்கே கால்வாய் பழுதான நிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் முன்பாக, பழுதான கிளை கால்வாய்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஆனால், இன்னும் கிராமங்கள் வழியாக செல்லும் பல கிளை கால்வாய்கள் சேதமடைந்த நிலையில் இருப்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,பிஏபி பாசன நீரையே நம்பியுள்ளனர். ஆனால், கிளை கால்வாய்கள் பல இடங்களில் சேதமடைந்து தண்ணீர் அதிகளவில் விரயமாகிறது. புதர் மண்டிய கிளை கால்வாய்களின் பக்கவாட்டுச்சுவர்கள் மோசமான நிலையில் காணப்படுகிறது.

கிளை கால்வாய்களில், சில ஆண்டுக்கு முன்பு, ஆங்காங்கே பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. அதன்பின் அந்த பணியுடன் நின்று போனதால், இன்னும் பல பகுதிகளில் கால்வாய்கள் புதர்கள் மண்டி சேதமடைந்தவாறு உள்ளது. எனவே, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, போர்க்கால அடிப்படையில் கிளை கால்வாய்களை சீரமைத்தால் மட்டுமே, அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடைகோடி விவசாயிகளுக்கு முறையாக பகிர்ந்தளிக்க முடியும். பழுதான நிலையில் உள்ள பிஏபி கிளை கால்வாய்களைபராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments