கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்! கிராமசபை கூட்டங்களில் தீர்மானம்!!

 

-MMH

சென்னைக்கு அடுத்தப்படியாக ரெயில்வேக்கு அதிகமான வருவாயை கோவை ரெயில் நிலையம் ஈட்டி தருகிறது. பாலக்காடு கோட்டத்துடன் இருந்தபோது இங்கு உள்ள வருவாயை கொண்டு பாலக்காடு ரெயில் நிலையத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அதே நேரத்தில் கோவை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் கோவைக்கு வராமல் போத்தனூர் வழியாக கேரளா சென்றன. இதனால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை கொண்டு புதிதாக கோட்டம் அமைக்க வேண்டும் என்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டு, கோவை சேலத்துடன் சேர்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகும் குறிப்பிடதக்க எந்தவித வசதியும் கோவையில் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் பாதி பாலக்காட்டிற்கும், சேலத்திற்கும் வருகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்க பாலக்காடு கோட்டம் முன்வருவதில்லை. இதன் காரணமாக கோவையை தலைமையிடமாக கொண்டு புதிதாக ரெயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கோவை அருகே உள்ள போத்தனூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 1956-ம் ஆண்டு வரை ரெயில்வே கோட்டம் இருந்தது. அதன்பிறகு பாலக்காடு கோட்டம் (ஒலவக்கோடு) உருவாக்கப்பட்டு, கோவையை சேர்க்கப்பட்டது. இதனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1956-க்கு பிறகு கோவை மாவட்டத்தில் பீளமேடு ரெயில் நிலையம் மட்டும் புதிதாக திறக்கப்பட்டு உள்ளது.  கோவை மாவட்டத்தில் சுமார் 40 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் பாலக்காட்டை எடுத்துக் கொண்டால் 10 லட்சம் பேர் தான் இருப்பார்கள். கோவை பகுதியில் சுமார் 10 ரெயில் நிலையங்கள் வரை மூடப்பட்டு உள்ளன. ஆனால் பாலக்காட்டில் புதிதாக ரெயில் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் ரெயில் பாதை உள்ளது. இதில் 1700 கிலோ மீட்டர் கொங்கு மண்டலத்தில் வருகிறது. தென்னக ரெயில்வே கட்டுப்பாட்டில் சென்னை, சேலம், மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரெயில்வே கோட்டங்கள் உள்ளன.

 இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலம் இல்லாத வகையில் மதுரை, பாலக்காடு, சேலம் ஆகிய 3 ரெயில் கோட்டங்களின் கட்டுப்பாட்டில் கோவை மாவட்ட பகுதிகள் வருகிறது. இதில் கோமங்கலம் ரெயில் நிலையம் மட்டும் மதுரை கோட்டத்தில் உள்ளது. இதனால் கோவையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக அதிகமாக வருவாய் ஈட்டி கொடுக்கும் நகரம் கோவையாகும். ஒரு ரெயில்வே கோட்டம் உருவாக்குவதற்கு 600 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதை இருந்தால் போதும். எனவே மதுரை, சேலம், பாலக்காடு கோட்டத்தில் உள்ள பகுதிகளை பிரித்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும். இதன் மூலம் கோவை ரெயில் நிலையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இங்கிருந்து அதிக தூரம் செல்ல கூடிய ரெயில்களை இயக்கவும், கோவையில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க முடியும்.

புதிதாக கோட்டம் உருவாக்கப்படுவதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். கோவையில் இருந்து திண்டுக்கல் வரை 10 நிமிடத்திற்கு ஒரு முறை புறநகர் ரெயில்களை இயக்க முடியும். புதிதாக இரட்டை ரெயில் பாதை, வழித்தடங்கள்உருவாக்கப்படும். புதிய வழித்தடங்களை உருவாக்கி மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தி வழியாக கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகருக்கு நேரடியாக ரெயில்சேவை தொடங்கலாம். மேலும் செட்டிப்பாளையத்தில் இருந்து பல்லடம், காங்கயம், கரூர், திருச்சி வழியாக டெல்டா மாவட்டங்களில் இருந்து சரக்கு ரெயில் இயக்க முடியும். இதன் மூலம் பயண செலவு குறையும் ரெயில்வேக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கோவையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். 

கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் கோவை கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் கோவை கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே ரெயில்வே அதிகாரிகள் இதற்கான ஆய்வு பணியை மேற்கொண்டு தென்னக ரெயில்வேயின் 7-வது கோட்டமாக கோவையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments