மாணவர்களை நல்வழிப்படுத்த ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் உதவி மையம்! மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்!!.

   -MMH 

   கோவையை அடுத்த கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் போலீஸ் நிலையத்துக்குட்ட பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும் 76 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

இதை அறிந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் மாதையன், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை பாராட்டினார். இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது;

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 130 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 225 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது. 150 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் தடை செய்யப்பட்ட 3 டன் குட்கா, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

போதை பழக்கத்திற்கு அடிமையாவதில் இருந்து இளைஞர்களை மீட்டு தடுப்பதே போலீசாரின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த பணிக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் கொடுப்பவர் களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். 

தொடர்ந்து கஞ்சா விற்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். செயின் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டை தடுக்க ஒவ்வொரு உட்கோட்டத்திலும் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை செயல்பட்டு வருகிறது.

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களை குற்றவாளிக ளாக பார்க்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மடிக்கணினி மற்றும் இரு சக்கர வாகன வசதிகளுடன் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள பெண் போலீசார், பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments