எவையெல்லாம் பாதுகாப்பற்ற தொடுதல்? குழந்தைகளுக்கு கற்பிக்க அறிவுரை!!

    -MMH 

    பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய சேர்மன் பழனிசாமி தலைமை வகித்தார். 

கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் தர்மராஜன் பேசியதாவது: ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து கற்பிக்க வேண்டும்.

பள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை தலைமையாசிரியர் மற்றும் பெற்றோரிடம் கொண்டு சென்று தீர்வு காணும் வகையில் பயிற்சி தர வேண்டும்.தங்களது கல்வி நிறுவனங்களில் உள்ள குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதை அறிந்தவுடன், தீங்கின் தன்மையைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு உடனடியாக தக்க ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு தீங்கு இழைப்பு குறித்து 1098 என்கிற மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.  

குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் பேசியதாவது: குழந்தைகளுக்கு எதிராக, உடல், மனம், பாலியல் மற்றும் உணர்வு ரீதியாக நடத்தப்படும் வன்முறைகள், உரிமை மீறல், புறக்கணிப்பு போன்றவையே தீங்கிழைத்தல் ஆகும்.இதுகுறித்து தகவல் தெரிந்த உடனே உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் தோழமை உணர்வோடு பழக வேண்டும்.குழந்தைகளை ஆண், பெண் என்னும் பாரபட்சம் காட்டாமல், சமமாக நடத்த வேண்டும். குழந்தைகள் தோல்வி அடையும்போது, தண்டனை கொடுப்பதை தவிர்த்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.தங்கள் குழந்தைக்கு தீங்கிழைக்கப்பட்ட விவரங்களை அறிந்த பின் உடனடியாக உளவியல் நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.கூட்டத்தில், 'குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என, கண்டறிதல், பள்ளியில் பாலியல் வன்முறை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தை திருமணம் தண்டனைக்குரியது என்பதை தெரியப்படுத்துதல்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்ச்சியில், பி.டி.ஓ., சுதாகரன், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அரவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் முருகன், காவல்துறை, ஊட்டச்சத்து உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments