பள்ளியில் சேர்ந்தால் 1000 பரிசு! அரசு பள்ளி தலைமையாசிரியர் பிரச்சாரம்!!

-MMH

 கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டு லட்சுமிநாயக்கன் பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, லட்சுமணசாமி தலைமை ஆசிரியராக உள்ளார். இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக, வீடு வீடாக பிரசாரம் செய்யும் இவர் கூறியதாவது:

இப்பள்ளி கடந்த, 1950ல் ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில், இந்த ஊரில், 430 பேர் உள்ளனர். இதில், ஆரம்ப பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் மிக குறைவு. ஆரம்ப காலத்தில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு படித்துள்ளனர். அப்போது, மூன்று ஆசிரியர்கள் இருந்தனர்.

தற்போது, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 13 பேர் மட்டுமே படிக்கின்றனர்.உடன் இருந்த ஒரே ஒரு ஆசிரியரும் பணியிட மாற்றம் பெற்று சென்றார். தற்போது, நானே ஆசிரியர்; நானே தலைமை ஆசிரியர். இது சிறிய கிராமம் என்பதால் சேர்க்கை குறைவாக உள்ளது.

அதிக மாணவர்களை சேர்க்கும் முயற்சியாக, 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளேன். மாணவர்களை சேர்க்க முயற்சிப்பவருக்கும் இத்தொகையை வழங்குவேன். கூடுதலாக ஒரு ஆசிரியர் மட்டும் இருந்தால் மாணவர்களை கவனிக்க உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments