திறந்தவெளி பார் ஆக மாறியுள்ள மலைப்பாதை! விபரீதத்தை உணராத குடிமகன்கள்!!
மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலையில் அமைந்துள்ள ரோடு, 'குடி'மகன்களின் திறந்தவெளி 'பார்'ஆக மாறியுள்ளது. இதனால் வன விலங்குகளின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, மனித - வன விலங்கு மோதல் சம்பவங்களும் அதிகரிக்க காரணமாகியுள்ளது.மேட்டுப்பாளையம்-- கோத்தகிரி ரோடு மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த ரோடு, மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளை பிரிக்கும் எல்லையாக உள்ளது. ரோட்டின் ஒரு பக்கம் சிறுமுகை வனப்பகுதியாகவும், மற்றொரு பக்கம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியாகவும் உள்ளது. அதனால் யானைகள், காட்டு மாடுகள், மான்கள், புலி, சிறுத்தை, கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் இரை தேடவும், தண்ணீர் குடிக்கவும், கோத்தகிரி ரோட்டை கடந்து சென்று வருகின்றன. கோத்தகிரி ரோட்டில் யானைகள், காட்டு மாடுகள், மான்கள் நடமாட்டம் உள்ளதால், ரோட்டில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும். ரோட்டின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என, வனத்துறையின் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அறிவிப்புகள் வெறும் பலகையாக உள்ளன. மாலை நேரத்தில் வனவிலங்குகளை பார்க்க, கோத்தகிரி ரோட்டில், மலைப்பாதையில் இரண்டாவது வளைவு வரை, ஏராளமானவர்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்க்கின்றனர்.
இரவில், வனப்பகுதி ரோட்டின் ஓரத்தில், அமைத்துள்ள சிறிய பாலத்தின் மீது, 'குடி'மகன்கள் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாகவுள்ளது இவர்கள், பாட்டில்களை சாலையின் ஓரத்திலும், பாலத்திலும் போட்டு உடைக்கின்றனர். உணவுப் பொருளை கொண்டு வரும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தட்டுகளை, வனப்பகுதியில் போட்டுச் செல்கின்றனர். மொத்தத்தில் வனப்பகுதி, 'குடி'மகன்களின் திறந்தவெளி பாராக உள்ளது. சில கல்லுாரி இளைஞர்கள் சாகச அனுபவம் என்ற பெயரில் இப்பகுதிகளில் வந்து கும்மாளம் போடுகின்றனர். இதனால், மனித - வனவிலங்கு மோதல் ஏற்பட வழிவகையாக அமைந்துள்து. மேலும், வனப்பகுதியில் 'குடி'மகன்கள் போடும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், மீதமான உணவு பொருட்களை சாப்பிடும் வனவிலங்குகளுக்கு, உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.வனத்துறையினர் இரவில் கோத்தகிரி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு, பாலத்தின் மீது அமர்ந்து, மது குடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments