பூமி பூஜை போட்டாச்சு! வேலையை எப்ப சார் தொடங்குவீர்கள்? பரிதவிப்பில் வாகன ஓட்டிகள்!!

 

-MMH

கோவையில் ரோட்டை அகலப்படுத்தி, மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கி, அமைச்சர் முன்னிலையில் பூமி பூஜை போட்டு, 10 நாட்களாகியும், வேலையை துவக்காமல், மாநில நெடுஞ்சாலைத்துறை மெத்தனமாக செயல்படுகிறது. கோவையில் பல்வேறு இடங்களில், 32 கிலோ மீட்டர் நீளத்துக்கு 113 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் பணியை, மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த, 4ம் தேதி துவக்கி வைத்தார்.அதில், மிகவும் முக்கியமானது,

ஆத்துப்பாலத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மெயின் ரோட்டில் குறிச்சி பிரிவில் இருந்து போத்தனுார் சந்திப்பு வரையிலான சாலையை அகலப்படுத்தி, ரோட்டின் இருபுறமும் மழை நீர் வடிகால் மற்றும் மையத்தடுப்புகளுடன் ரூ.12.99 கோடி மதிப்பீட்டில், நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதேபோல், சுந்தராபுரத்தில் இருந்து காமராஜ் நகர் வரை, மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் வடிகால், மையத்தடுப்பு ஏற்படுத்தி, இரு வழிப்பாதையில் இருந்து நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணி, 10 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விரு பணிகளுக்கும் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, பூமி பூஜை போட்டு, 10 நாட்களாகி விட்டது. இன்னும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசமும் முடிந்து விட்டது.

நில அளவைத் துறையினரால் காமராஜ் நகரில் செய்துள்ள அளவீடும், சுந்தராபுரம் பகுதியில் செய்துள்ள அளவீடும் முரண்பாடாக இருக்கிறது. மாநில நெடுஞ்சாலைத்துறையினரும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், மெத்தனமாக செயல்படுகின்றனர். 

பாதாள சாக்கடை குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டதால், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகி விடுகிறது. வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இதேபோல், குறிச்சி பிரிவில் இருந்து போத்தனுார் சந்திப்பு வரையிலான சாலையை மேம்படுத்துவதற்கான பணியிலும், சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டு, பூமி பூஜை மட்டும் போடப்பட்டிருக்கிறது.

அவ்வப்போது பெய்யும் மழையினால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன இதில் செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது எனவே விரைந்து இந்த சாலைகளை சரி செய்து தருவார்களா என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments