சாலைகளின் நிலை கண்டு வாகன ஓட்டிகள் அச்சம்!பருவமழையும் தொடங்கிவிட்டால் திண்டாட்டம்தான்!!

    -MMH 

    தென்மேற்குப் பருவமழை விரைவில் துவங்குமென்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நகரில் ரோடுகள் சீரமைப்புப் பணிகளைத் துவக்காமல், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

கோவை மாநகராட்சிப் பகுதிக்குள், தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகளுக்குச் சொந்தமாக 219.60 கி.மீ., துாரமும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 2618.08 கி.மீ., துாரமும் என மொத்தம் 2837.68 கி.மீ., துாரமுள்ள ரோடுகள் அமைந்துள்ளன.கடந்த பல ஆண்டுகளாக, இந்த ரோடுகள் சீரமைக்கப்படாததுடன், பாதாள சாக்கடை, குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டதால், படுமோசமான நிலையில் உள்ளன.

இந்த ரோடுகளுக்கு இன்று வரை விமோட்சனம் வரவில்லை. இவற்றில், மாநகராட்சிக்குச் சொந்தமான ரோடுகளின் நிலைதான் மிக மோசமாக உள்ளது. 4.1 கோடி ரூபாய் மதிப்பில், 'பேட்ச் ஒர்க்' மட்டுமே செய்யப்பட்டது. ரோடுகளின் நிலை பற்றி புகார் செய்வதற்கு, மாநகராட்சி அழைப்பு விடுத்தபோது, அதற்கு வந்த 2400க்கும் மேற்பட்ட புகார்களே, கோவை நகரில் மாநகராட்சி ரோடுகளின் நிலையை அம்பலப்படுத்தின.

நகருக்குள் பயணிக்கவே லாயக்கற்ற நிலையிலுள்ள, 456 ரோடுகளைச் சீரமைக்க ரூ.169 கோடி நிதி கேட்டு, அரசுக்கு மாநகராட்சி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. 

இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாகவுள்ள 16 ரோடுகளைச் சீரமைக்க ரூ.140 கோடி மதிப்பில் 'டெண்டர்' விடப்பட்டது, கோவை மக்களுக்கு ஆறுதலாக இருந்தது.இதற்கான 'ஒர்க் ஆர்டர்' கொடுத்தும், பல நாட்களாகி விட்டது. இந்த 16 ரோடுகளில், சுந்தராபுரம்-மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் மட்டுமே, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டியுள்ளது.

குறிச்சி பிரிவு-போத்தனுார் சந்திப்பு ரோட்டில், குழாய் பதிப்புப் பணியை, குடிநீர் வடிகால் வாரியம் இன்னும் முடிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.ஆனால் இன்று வரை ஒரு ரோட்டில் கூட பணிகள் துவங்கவில்லை. தென்மேற்குப் பருவமழை, கேரளாவிலும், கோவையிலும் பரவலாகத் துவங்கி விட்டது. இனி ஓரிரு வாரங்களில் மழை மேலும் வலுக்கவும் வாய்ப்புள்ளது.

அப்படி வலுக்கும்பட்சத்தில், ரோடு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முடியாது. இப்போதுள்ள ரோடுகளின் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.அதற்குள் ரோடு சீரமைப்புப்பணிகள் துவக்கப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. கோவை கலெக்டர்தான், இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி ரோடுகளைச் சீரமைக்க துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிடில், ரோடு சீரமைப்புக்காக கோவை மக்கள் தெருவில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படுவது நிச்சயம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

- சி.ராஜேந்திரன்.

Comments