நிலத்தடி நீர்மட்டம் உயர புதிய திட்டம்! பம்ப் ஹவுஸ் ரெடி!! மின் இணைப்புக்காக காத்திருப்பு!!!

-MMH

ஒண்டிப்புதுார் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீரை, காடு,குட்டைக்கு கொண்டு செல்லும் திட்டப்பணி, 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. பம்ப் ஹவுஸ்க்கு மின் இணைப்பு கொடுத்து விட்டால், குளத்துக்கு தண்ணீர் செல்லத்துவங்கி விடும்.

செட்டிபாளையம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டன. 1,500 அடிக்கு 'போர்வெல்' போட்டாலும் தண்ணீர் வருவதில்லை. இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. விவசாயம் செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள், விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்க ஆரம்பித்தனர்.நிலத்தை காப்பாற்ற போராடிய விவசாயிகள், சுத்திகரித்த நீரை கொண்டு நீர் நிலைகளை நிரப்ப கோரிக்கை விடுத்தனர். 

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையத்தில், நாளொன்றுக்கு, 6 கோடி லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கலாம். சுத்திகரித்த நீர், நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது. அதை விளைநிலத்துக்கும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் உபயோகிக்கலாம்.சுத்திகரிப்பு நிலையத்துக்கு பின்புறம் நொய்யல் ஆற்றின் கரையில் நீரூந்து நிலையம் கட்டி, 'பம்ப்' செய்து, குழாய் மூலமாக, காடு,குட்டைக்கு கொண்டு செல்லலாம் என, பொதுப்பணித்துறை திட்டமிட்டது. இத்திட்டத்துக்கு ரூ.4.76 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது, பம்ப் ஹவுஸ் கட்டுமான பணி முழுமையாக முடிந்து, குட்டை வரை குழாய் பதிக்கப்பட்டு விட்டது. 125 எச்.பி., திறனுள்ள மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 18 ஏக்கர் பரப்பளவுள்ள குட்டையை, அப்பகுதி விவசாயிகளும், சுற்றுவட்டார தொழில் முனைவோரும் துார்வாரி, கரையை பலப்படுத்தியுள்ளனர். இனி, மதகு மட்டும் வைக்க வேண்டியிருக்கிறது

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒண்டிப்புதுார் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பட்டணம் வழியாக, 5 கி.மீ., துாரத்துக்கு இரும்பு குழாய் பதித்து, தினமும், 50 லட்சம் லிட்டர் சுத்திகரித்த நீரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். காடுகுட்டை நிரம்பியதும் அடுத்தடுத்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.    

இலவச இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரியத்துக்கு முறையிட்டிருக்கிறோம்' என்றனர். விவசாயிகள் கூறுகையில், 'காடுகுட்டையை நிரப்பியதும், 28 குட்டைகளுக்கு நில வழிப்பாதையில் தண்ணீர் கொண்டு செல்லப்படும். பட்டணம், பீடம்பள்ளி, செட்டிபாளையம், ஓராட்டுக்குட்டை, ஒக்கிலிபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும். 20 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்; 10 ஆயிரம் ஏக்கர் பரப்புக்கு விவசாயம் செழிக்கும். விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் இணைந்து குட்டையை துார்வாரி இருக்கிறோம். இதேபோல் பல நிறுவனங்கள் முன்வந்தால், மற்ற நீர்நிலைகளையும் துார்வாரி தண்ணீர் தேக்கலாம்' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி. ராஜேந்திரன்.

Comments